யானை மிதிச்ச ஆளை தூக்கிட்டு வந்தா டாக்டரே இல்லை: வேலுமணி தொகுதியின் வேதனை
தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சட்டுபுட்டுன்னு நைட் டூட்டி டாக்டர்ஸை பணியமர்த்தணுமுங்க என மக்கள் கோரிக்கை
யானை மிதிச்ச ஆளை தூக்கிட்டு வந்தா டாக்டரே இல்லை என வேலுமணி தொகுதியில் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சுமார் தொண்ணூறு கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரம் மக்களின் காவல் தெய்வமாக இருக்க கூடிய அரசு மருத்துவமனையில் இரவு நேர டாக்டர் இல்லாமல் இருப்பது எவ்வளவு அவலம்? ஆனால் அந்த கொடுமை நடக்கிறது. எங்கோ ஒரு வனத்தினுள் அல்ல, தமிழகத்தின் இரண்டாவது ஹைடெக் சிட்டியான கோவையை உரசியபடி இருக்கும் தொண்டாமுத்தூரில்தான்.
யெஸ்! கோவை மாவட்டத்தின் பத்து சட்டசபை தொகுதிகளில் ஒன்று தொண்டாமுத்தூர்.விவசாயம், வனம், கிராமங்களால் நிரம்பி வழியும் அத்தனை அழகான தொகுதி இது. இத்தொகுதியின் தலைநகரான தொண்டாமுத்தூரில் அரசு மருத்துவமனை உள்ளது. 60 படுக்கை வசதி, ஆபரேஷன் தியேட்டர், சித்தா பிரிவு, எக்ஸ்ரே வசதி, தீவிர சிகிச்சை பிரிவு என எல்லாமே இருக்கிறது.ஆனாலும், இரவு நேரத்தில் உயிர்போகும் அபாயத்துடன் வரும் நோயாளிகளில் பலருக்கு உண்மையிலேயே உயிர் போய்விடுகிறது.
காரணம்? நைட் டூட்டி டாக்டர்கள் இல்லாத காரணத்தால்தான். சுமார் பதினைந்து பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இரவு நேர மருத்துவர் இல்லாத நிலைதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த மருத்துவமனையில் பகல் வேளைகளில் தினமும் நானூறு பேர் வரையில் நோயாளிகள் வருகிறார்கள். காரணம் சுற்றுவட்டார 90 கிராமங்களை சேர்ந்த நோயாளிகளின் அரசு மருத்துவமனை இதுதான்.
பகலிலேயே டாக்டர்கள் பற்றாக்குறை எனும் நிலையில் இரவிலோ சுத்தம்! டாக்டர் இருப்பதே இல்லை.விளைவு? அந்த வேதனையை விளக்கும் நரசிபுரத்தை சேர்ந்த தெய்வானை “இந்த ஆஸ்பத்திரியை நம்பி இருக்கிற ஊர்களெல்லாம் விவசாயமும், காடுகளை ஒட்டிய பகுதியையும் சேர்ந்தவுங்கதான். பெரியளவுக்கு வருமானம் உள்ளவங்க ஓரளவுதான். மற்ற மக்களெல்லாம் நடுத்தரம் மற்றும் ஏழைகள்தான். விவசாய பூமியில பாம்புக்கடி சகஜமுங்க. அதேமாதிரி வனத்தை ஒட்டிய கிராமங்கள்ள திடீர்னு யானை நுழைஞ்சு ஆட்களை மிதிச்சிடுது. இது போக விபத்துக்களும் நிறைய நடக்குது.
இந்த மாதிரி சூழல்ல ரத்தம் வழிய, உறைய ஆளுங்களை தூக்கிட்டு தொண்டாமுத்தூர் ஆஸ்பத்திரிக்கு போனாக்க ‘நைட் டூட்டி டாக்டர் இல்லிங்களே’ன்னு சொல்றாங்க. இதனால அங்கேயிருந்து பதினஞ்சு கிலோமீட்டர் தொலைவுல உள்ள கோவை கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்குதான் போகோணும். ஆனால் பல நேரங்கள்ள அங்கே கொண்டு போறதுக்குள்ளே உயிர் போயிடுது, இல்லாங்காட்டி நிலைமை ரொம்ப மோசமாயிடுது.அதனால தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சட்டுபுட்டுன்னு நைட் டூட்டி டாக்டர்ஸை பணியமர்த்தணுமுங்க” என்கிறார்.
இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வான மாஜி அமைச்சர் வேலுமணி, எதற்கெல்லாமோ போராட்டம் நடத்துகிறார்.கையோடு இதற்கு ஒரு போராட்டத்தை, உண்ணாவிரதத்தை அறிவித்து, அரசின் கவனத்தை ஈர்க்கலாம்!
-ஷக்தி
What's Your Reaction?