புதிய இடத்திற்கு அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. காரணம் இதுதானா?
புதிய இடத்திற்கு தலைமை அலுவலகத்தை மாற்ற முடிவெடுத்த அமேசான் நிறுவனம்
உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் பெங்களூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) அமைந்துள்ளது.இந்நிலையில், அமேசான் நிறுவனம் தங்களது அலுவலகத்தை பெங்களூரு விமான நிலையம் அருகே உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்ற தயாராகி வருவதாக கூறப்படுகிறது. செலவுகளை குறைக்கும் விதமாகவும், வர்த்தகத்தை அதிகரிக்கும் விதமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமேசான் நிறுவனம், உலக வர்த்தக மைய கட்டிடத்தை முழுவதுமாக காலி செய்துவிட்டு புதிய கட்டிடத்திற்கு தங்களது அலுவலகத்தை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 18 தளங்கள் கொண்ட உலக வர்த்தக மைய கட்டிடத்தை அமேசான் நிறுவனம் காலி செய்வதன் மூலம் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய நிதி நெருக்கடி ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் தற்போது உள்ள இடத்திற்கு செலுத்திவரும் வாடகையை விட மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான வாடகையை புதிய கட்டிடத்திற்கு அமேசான் நிறுவனம் செலுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த புதிய வளாகம் பணியாளர்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், அனுபவத்தை மேம்படுத்துவதற்குமான நவீன வசதிகளை கொண்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தக மைய கட்டிடத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புதிய தளம், பல சவால்களை முன்வைக்கிறது. பெங்களூருவின் மோசமான போக்குவரத்து நெரிசல் காரணமாக விமான நிலையத்திற்கு பல மணிநேரம் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அமேசான் நிறுவனத்தின் ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கப்படுவார்கள் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், விமான நிலையம் அருகே அமேசான் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இடங்களை வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?