மன்னர் சார்லஸ் கவலைக்கிடம்.. இறுதிச்சடங்குக்கு இப்போதே தயாராகும் பக்கிங்ஹாம் அரண்மனை

புற்றுநோயினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கவலைக்கிடமாக இருக்கிறார். இதனால் இங்கிலாந்து மக்கள் அதிர்ச்சியடைந்தாலும், இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் இப்போதே அரண்மனை நிர்வாகம் இறங்கி உள்ளது.

Apr 26, 2024 - 18:27
மன்னர் சார்லஸ் கவலைக்கிடம்..  இறுதிச்சடங்குக்கு இப்போதே தயாராகும் பக்கிங்ஹாம் அரண்மனை

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடைந்தார். இதனையடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ், இங்கிலாந்து மன்னராக முடிசூட்டப்பட்டார். அவரால் அந்த பதவியை ஆனந்தமாக அனுபவிக்க முடியவில்லை. எதிர்பாரா வகையில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். 

புற்று நோய் பாதிப்பை அவர் வெளியுலகுக்கு உறுதி செய்தபோதும், அது எம்மாதிரியான பாதிப்பு, எந்த கட்டத்தில் உள்ளது என்பதை மன்னரோ, அரண்மனை நிர்வாகமோ இன்னமும் தெரிவிக்கவில்லை.

புற்று நோயின் தீவிரத்தினால் சார்லஸ் மன்னரின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கான பிரம்மாண்ட இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் அரண்மனை நிர்வாகம் இப்போதே இறங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

'மெனாய் பாலம்' என்ற மறைமுகப் பெயரிலான மன்னரின் இறுதிச்சடங்கு ஏற்பாட்டுக்கான ஆவணங்கள் தற்போது வெளியே கசிந்துள்ளன. மெனாய் பாலம் என்பது ஆங்கிலேசி தீவை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் ஒரு தொங்கு பாலத்தின் பெயராகும். இதன் பெயரில் தற்போதைய மன்னர் சார்லஸின் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. 

மன்னர் சார்லஸின் இறுதிச்சடங்குக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் மட்டுமன்றி, அதற்கான உலகத்தலைவர்கள் வருகை, துக்கம் அனுஷ்டிப்பது, இறுதி ஊர்வலம் தொடங்கி சடங்குகள் வரையிலான நடைமுறைகள், சிறிய இடைவெளியில் அடுத்த மணிமகுடத்துக்கு இளவரசர் வில்லியமை தயார் செய்வது போன்ற பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில் அடுத்த மன்னராக அரியணை ஏற வேண்டிய பட்டத்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டனை பாதித்த புற்றுநோய் பாதிப்பு காரணமாக, தயங்கி வருவது குறித்த செய்திகளும் வெளியாகி உள்ளன. இதே போன்று ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள், 'ஆபரேசன் லண்டன் பாலம்' என்ற மறைமுகப் பெயரில், அவர் உயிரோடு இருக்கும்போதே ஆவணங்களாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow