கங்குவா பற்றி பேச மாட்டேன்- தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு
இப்போது எல்லாம் நடித்த நடிகைகளே அவர்கள் படங்களின் பிரமோஷனுக்கு வருவதில்லை .அதற்குத் தனியாகப் பணம் தர வேண்டும் என்கிறார்கள்.
கங்குவா பற்றி பேச மாட்டேன் என விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே.ராஜன் பேசியதால் பட விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம்கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். 'லாரா' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இதில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, " இந்தத் தயாரிப்பாளரின் நட்பு பலத்தை இங்கே பார்க்க முடிகிறது.அவ்வளவு கூட்டம் கூடி இருக்கிறார்கள். உறவுகளை விட நட்பு முக்கியம்.இந்தத் தயாரிப்பாளர் சினிமாவை நேசித்து வந்திருக்கிறார். ஒரு இயக்குநர் தனது சொந்தக்கதையை இயக்குவதில் பிரச்சினை இல்லை. ஓர் எழுத்தாளர் எழுதிய கதையை இயக்குவதில் கூட பிரச்சினை இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கதையை இயக்குவது என்பது பிரச்சினையான ஒன்று. அதுவும் படப்பிடிப்பில் கூடவே இருந்து நடித்துக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர் என்றால் மேலும் சிரமமாக இருக்கும், பயமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் நம் படைப்பு சுதந்திரம் அதில் இருக்குமா என்பது சந்தேகம். எனவே தயாரிப்பாளர் கதையை இயக்கி இருக்கும் இயக்குநருக்கு பெரிய நம்பிக்கை இருந்திருக்க வேண்டும் .இந்த சினிமாவில் மதம் கிடையாது, ஜாதி கிடையாது .வெளியில் போனால் தான் மதம் ஜாதி என்று வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள்.
லாரா படத்தின் கதாநாயகன் அசோக்குமார் சினிமாவின் ஒரு கஜினி முகம்மது என்று சொல்வேன். அவர் தோல்விகளைச் சந்திக்கவில்லை, வெற்றிக்கான பயணத்தில் முயற்சியில் இருக்கிறார்.நான் புதிய கதாநாயகர்களுக்குச் சொல்லிக் கொள்வேன்.ஒரு படத்தில் 25 லட்சம் சம்பளம் வாங்கினால் அடுத்த படத்தில் 50 அடுத்த அடுத்த படங்களில் என்றால் உயர்த்தி ஒரு கோடி வரை செல்லலாம். ஆனால் 25 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் அடுத்த படத்திலேயே மூன்று கோடி கேட்பார்கள் என்றால் அது அநியாயம். பேராசைப்பட வேண்டாம் படிப்படியாக உயர்த்தி வளருங்கள். அநியாயமாக உயர்த்த வேண்டாம் " என்று கூறிப் படக் குழுவினரை வாழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து பேசிய விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே.ராஜன், " இந்தத் தயாரிப்பாளரை நான் மனமார வரவேற்கிறேன். சென்னையில் வந்து கஷ்டப்பட்டு பசியால் வாடி, முடியாமல் கோயம்புத்தூர் சென்று அங்கு முன்னேறி சம்பாதித்து வெற்றி பெற்றிருக்கிறார் .இவர் நட்பு வட்டத்தைப் பெரிதாகச் சம்பாதித்துள்ளார் .நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும். இந்த படம் வெற்றி பெறாவிட்டால் கூட இந்தத் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுக்க வேண்டும். ஏனென்றால் இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்குத் தேவை. லாரா படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருந்தது. இஸ்லாமிய திருமணம் சார்ந்து ஒரு பாடல் வருகிறது. எம்மதமும் சம்மதம் என்பதுதான் நமது கொள்கை. எல்லா மதங்களும் நல்லவற்றையே சொல்கின்றன.
குறுகிய நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். ஒரு திரைப்படத்திற்குக் கதை தான் முக்கியம். ஹீரோவுக்கு கொட்டிக் கொடுத்தால், அவர்கள் நன்றாக இருப்பார்கள், தயாரிப்பாளர்கள்தான் நடுத்தெருவுக்கு வருவார்கள். இன்று இருநூறு தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள். முன்னூறு நானூறு படங்கள் வெளியிட முடியாமல் இருக்கின்றன .
இது சின்ன படங்களின் காலம். இன்று சின்ன படங்கள் ஓடுகின்றன. இந்த ஆண்டு நல்ல கதை உள்ள சின்ன படங்கள் எல்லாம் ஓடி இருக்கின்றன. பல கோடிகளில் எடுக்கப்படுவது எல்லாம் ஓடுவதில்லை. சின்ன படம் வாழை, லப்பர் பந்து போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
படத்துக்கு விமர்சனம் தேவைதான். நல்லது நன்றாக இருந்தால் நல்லதாக எழுதுங்கள். குறை இருந்தால் குறைவாக எழுதுங்கள். சின்ன படங்களைக் காப்பாற்றுங்கள்.
ஒரு கதாநாயகன் நடிகர் ஒன்பது பேரிடம் பல கோடிகள் முன்பணம் வாங்கி இருக்கிறார். அதும் போதாது என்று இன்றைக்கு இந்திக்கு நடிக்கச் சென்று விட்டார். இப்படி இருக்கிறது நிலைமை.இந்தப் படத்திற்கு மூன்று கதாநாயகிகளும் படத்தை விளம்பரப்படுத்தும் இந்த பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி. இப்போது எல்லாம் நடித்த நடிகைகளே அவர்கள் படங்களின் பிரமோஷனுக்கு வருவதில்லை .அதற்குத் தனியாகப் பணம் தர வேண்டும் என்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்து நல்லதை எழுதுங்கள், உள்ளதை எழுதுங்கள், குறைகளை குறைத்து எழுதுங்கள்" என்றார்.
What's Your Reaction?