எம்ஜிஆரின் கலர்ஃபுல் காதல் கொண்டாட்டம்... ‘அன்பே வா’!
எம்ஜிஆரின் ‘அன்பே வா’ திரைப்படம், காதல், நகைச்சுவை, இசை மற்றும் வண்ணமயமான காட்சிகளால் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அது குறித்தான செய்தி இத்தொகுப்பு விவரிக்கிறது.
’அன்பே வா’ வந்து 60 ஆண்டுகள்!
சில படங்கள் காலத்துக்கும் மறக்கமுடியாத படங்களாக அமைந்துவிடும். ‘இப்படியொரு படமே இனி வராது’ என்று கொண்டாடுகிற படங்களாகவும் அவை இருக்கலாம். ‘எத்தனை முறை பார்த்தாலும் அலுப்புமில்லை, சலிப்புமில்லை’ என்று பாராட்டிக்கொண்டே இருக்கிற படமாகவும் இருக்கலாம். அந்த வகையில் 1966ம் ஆண்டு வந்த சில படங்கள், இப்போது 60ம் ஆண்டில் அடியெடுத்திருக்கின்றன.
இன்றைக்கும் ஏதோவொரு வகையில் பேசுபொருளாகவும் இருக்கின்றன. அந்தப் படங்களின் வரிசையில் ‘அன்பே வா’வை கொஞ்சம் பார்ப்போம். ஏவி எம் கம்பெனி எத்தனையோ படங்களை தயாரித்திருக்கிறது. எம்ஜிஆர் எத்தனையோ நிறுவனங்களுக்கு படம் பண்ணிக்கொடுத்திருக்கிறார். ஆனாலும் ஏவிஎம்மிற்கும் எம்ஜிஆருக்கும் பெருமை சேர்த்த ‘அன்பே வா’ துள்ளத்துடிக்கிற கலர்ஃபுல் படமாக வந்ததும் ஏவிஎம்மில் எம்ஜிஆர் நடித்த ஒரே படம் என்பதும் மறக்கவே முடியாத ஒன்று.
இன்றைக்கும் இருக்கிற ஹீரோக்கள், தங்களின் மார்க்கெட் வேல்யூவுக்காக, கோடிகளின் சம்பளங்களைப் பெறுவதற்காக, நம்பர் ஒன், நம்பர் டூ எனும் இடங்களை நோக்கி நகருவதற்காக, அவர்கள் தேர்வு செய்கிற கதைக்குள்ளே எம்ஜிஆர் இருக்கிறார். மக்கள்திலகம் எம்ஜிஆர் படங்களுக்கென ஒரு இலக்கணம் இருக்கும். அதுவே எம்ஜிஆர் ஃபார்முலா என்று சினிமாக்காரர்களால் அடுத்தடுத்த காலகட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், ‘அன்பே வா’ திரைப்படம் எம்ஜிஆர் படமாக இல்லாமல், அழகான காதல் படமாக வந்ததுதான் எம்ஜிஆருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் கிடைத்த ஸ்பெஷல்!
அறுபதுகளில் எம்ஜிஆரை வைத்து படம் எடுக்க நினைத்து, அவரிடம் சம்மதம் பெற்றுவிட்டால், அவரின் கால்ஷீட்டைக் கூட முதலில் வாங்கமாட்டார்கள். அவரின் சம்மதம் கிடைத்த கையுடன், இரண்டுபேரின் கால்ஷீட்டை முதலில் புக் செய்துவிடுவார்கள். ஒருவர்... சரோஜாதேவி. இன்னொருவர்... நாகேஷ். இசையமைப்பாளர் மெல்லிசை மன்னரோ மாமா என அன்புடன் அழைக்கப்படும் கேவி மகாதேவனோ... பாட்டுகளை வாங்குவதில் எம்ஜிஆர் வித்தகர் என்பதுதான் வரலாறு.
அதிலும் சரோஜாதேவிக்கு பதிலாக வேறொரு நடிகையைக் கூட சமாளித்து, காம்ப்ரமைஸ் செய்துகொள்வார்கள். ஆனால் நாகேஷூக்கு மாற்றாக சாய்ஸே இல்லை.
இந்த ‘அன்பே வா’ படம், எம்ஜிஆர் பாணி படமல்ல. ஆனால் எம்ஜிஆர் படம். வழக்கமாக, அவரின் படங்களை ப. நீலகண்டனோ கே.சங்கரோ, தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தாரோ, டிஆர் ராமண்ணாவோ எடுப்பார்கள். ஏவி எம் நிறுவனத்தில் முதன்முதலாக எம்ஜிஆர் நடித்த ‘அன்பே வா’ படத்தில், எல்லாமே புதுசு. ஆனாலும் அதை எம்ஜிஆர் முழுவதுமாக ஏற்றுக்கொண்டார்.
1966ம் ஆண்டு பொங்கலுக்கு வந்த ‘அன்பே வா’, மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இத்தனைக்கும் அதே வருடத்தில் ‘நான் ஆணையிட்டால்’, ‘சந்திரோதயம்’, ‘பறக்கும் பாவை’, ‘தனிப்பிறவி’, ‘பெற்றால்தான் பிள்ளையா’ என ஆறு படங்கள் வெளியாகின. இதில் ‘அன்பே வா’ படமும் ‘பறக்கும் பாவை’யும் வண்ணப்படங்களாக அமைந்தன.
சரி ‘அன்பே வா’ படத்துக்கு வருவோம். அம்மா செண்டிமெண்ட், காதல், பழிவாங்கல், நாலு சண்டை, க்ளைமாக்ஸில் உறவுகளை மீட்டெடுப்பது, அநியாயத்தை எதிர்த்து போராடி ஜெயிப்பது என்று எல்லாமே இருக்கும். இதற்குள் ஏகப்பட்ட கதை மாற்றங்கள், திரைக்கதை ஜாலங்கள், வாழ்வியல் தத்துவங்கள் என எல்லாமே அடங்கியிருக்கும். ஆனால் இவை எதுவுமில்லாமல் எம்ஜிஆரின் ஃபார்முலாவே இல்லாமல் வந்த எம்ஜிஆர் படம் இதுவாகத்தான் இருக்கும்,
மெல்லிசை மன்னரின் பாடல்கள் படத்தின் காதலை இன்னும் அடர்த்தியாக்கிக் கொடுத்தன. வாலியில் வரிகளில், ரசனை ரகளை கிளப்பின. ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘உதயசூரியனின் பார்வையிலே’ எனும் வரிகளை மாற்றச் சொல்லி சென்சார் போர்டு கட்டையைக் கொடுத்தது. ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என மாற்றப்பட்டது.
படத்தில் எம்ஜிஆர் ஜோடி, நாகேஷ் ஜோடி, டி ஆர் ராமச்சந்திரன் ஜோடி என மூன்று ஜோடிகளும் காமெடியிலும் கலக்கியெடுத்த ஜாலம் இயக்குநர் ஏ சி திருலோகசந்தரின் கைவண்ணம். ஆரூர்தாஸின் வசனங்கள், அழகியலுடன் செதுக்கப்பட்டிருந்தன. சிம்லாவில் படப்பிடிப்பு என்றாலும் சில காட்சிகள் ஊட்டியில் எடுத்தார்கள்.
அந்தக் காலத்தில் எம்ஜிஆர் இருந்தால் நம்பியாரோ அசோகனோ கொடூர வில்லனாக இருப்பார்கள். ஆனால் இந்தக் காலத்து பணக்கார முறைமாமன் போல், மூன்று காட்சிகளில் வந்து, முத்திரை பதித்திருப்பார் அசோகன். ஏவி எம் சரவணனும் அசோகனும் ‘வாடாபோடா’ நண்பர்கள். ஆகவே, ஏவி எம் படங்களில் அசோகனுக்கு ஒரு கேரக்டர் கொடுத்துவிடுவார் சரவணன். இதில், சரோஜாதேவியின் முறைமாப்பிள்ளையாக, பைலட்டாக வந்து நடிப்பில் கொடிபறக்கவிட்டிருப்பார் அசோகன்.
மேற்கத்திய இசை பாணியில், ‘ஏய் நாடோடி நாடோடி’ என்கிற பாடலை படமாக்குவதற்கு பல நாட்கள் பிடித்தன. இந்த பாடலில் எம்ஜிஆர் புதுப்புது ஸ்டெப்களைப் போட்டு அசத்தியிருப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்ற பாடல், இன்றைக்கும் பலரின் செல்பொன்களில், சப்பளங்கால் போட்டுக்கொண்டிருக்கிறது.
சரோஜாதேவியின் காஸ்ட்யூம், அதிக செலவானதாகச் சொல்லுவார்கள். சாரட் குதிரையின் ‘நுக்நுக்நுக்’ சத்தத்துடன் ரிதம் போட்டு, காதலிசையைக் கொடுத்திருப்பார் மெல்லிசை மன்னர். டிஎம்எஸ், சுசீலா இருவரும் படத்துக்கு கூடுதல் இளமை சேர்த்தார்கள். ‘லவ்பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ்’ பாடலில் சரோஜாதேவியின் பாவனைகள், சிக்னேச்சராகவே ஆகிப்போனது.
65ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான ‘எங்க வீட்டு பிள்ளை’ போலவே 66ம் ஆண்டு வெளியான ‘அன்பே வா’வும் வசூலில் சக்கைப்போடு போட்டது. சொல்லப்போனால்,பொங்கலுக்கு அன்பே வா வருவதற்கு ஏவி மெய்யப்பச் செட்டியார் ஆசைப்பட்டார். அது திடீர் ஆசை. ‘நாகிரெட்டியார் படம் எங்க வீட்டு பிள்ளை இந்த பொங்கலுக்கு வந்திருச்சி. அதேபோல வரக்கூடிய பொங்கலுக்கு நம்ம படமும் வந்தால் நல்லாருக்கும். சின்னவர்கிட்ட கேட்டுப்பாரு’ என்று மகனை அனுப்பிவைத்தார் செட்டியார். எம்ஜிஆரை சின்னவர் என்றுதான் சினிமா வட்டத்தில் அழைப்பார்கள்.
எம்ஜிஆரிடம் கேட்க, ஆர் எம் வீரப்பன், ‘நான் ஆணையிட்டால்’ படத்தை பொங்கலுக்கு வெளியிடுற வேலைல இருக்காரு. அவர்கிட்ட கேட்டுப்பாருங்க’ என்று எம்ஜிஆர் சொல்ல, ‘அப்பச்சியே ஆசைப்பட்டிருக்காங்க. தாராளமாக பொங்கல் ரிலீஸை எடுத்துக்கோங்க. நான் பிப்ரவரிக்கு தள்ளிப்போட்டுக்கறேன்’ என்று ஆர் எம் வீரப்பன் மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டார். சின்னசின்ன வகையில் கால்ஷீட் மாற்றப்பட்டது.
இதற்காக எம்ஜிஆர் பேசிய சம்பளத்தைவிட 25 ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கேட்டார். கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொகையை ராணுவத்தினருக்காகவும் வழங்கினார். அப்போது சிம்லாவில் பார்த்த ராணுவவீரரிடம் பேசிய எம்ஜிஆர், ஊர், பேர் விவரங்களைக் கேட்டு, அந்த கிராமத்துக்கு ஒருவரை அனுப்பி, அந்த ராணுவவீரரின் தாயாருக்கு தனிப்பட்ட உதவிகளையும் செய்தார்.
படத்தில் எம்ஜிஆருக்கு ஒரேயொரு சண்டைக்காட்சிதான். அதுவும் ‘ட்ரூ லவ்’ என்று சொல்லி அவர் சிரித்துக்கொண்டே எம்ஜிஆருக்கு கைகுலுக்கி விடைசொல்லிச் செல்வார். எம்ஜிஆரின் திரைவாழ்வில் ‘அன்பே வா’ போல ஒரு படம், அதற்கு முன்பும் வந்ததில்லை; பிறகும் வந்ததில்லை. இன்னொரு விஷயம்... ஏவிஎம்மிற்கும் எம்ஜிஆருக்கும் சண்டை என எப்போதுமே இருந்ததில்லை. ‘அன்பே வா’ படத்தில் இன்னும் நெருக்கமானார்கள். ஆனால் எம்ஜிஆர் ஏவிஎம் படத்தில் நடித்தது ‘அன்பே வா’ எனும் ஒரேயொரு படத்தில் மட்டும்தான்!
இதே 66ம் ஆண்டில் சந்திரோதயம், நான் ஆணையிட்டால், பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா என எம்ஜிஆருக்கு வரிசையாக படங்கள் வந்தன. எம்ஜிஆரின் காதல் ப்ளஸ் குறும்பை அழகாகக் காட்டிய ‘அன்பே வா’வும் ஜெயித்தது. அவரின் உணர்ச்சி மிகுந்த நடிப்பில் வெளியான ‘பெற்றால்தான் பிள்ளையா’வும் வெற்றி பெற்றது.
எம்ஜிஆர் என்றாலே வெற்றிதானே! இதோ... 2027ம் ஆண்டு பொங்கல் வந்தால் ‘அன்பே வா’ படத்துக்கு 61 வயது. எத்தனை சிசி வண்டிகள் வந்தாலும் சாரட் வண்டியின் ‘ராஜாவின் பார்வை’க்கு நிகராகுமா?
வி.ராம்ஜி
What's Your Reaction?