”நாளு நாட்களில் 4 கிலோ குறைஞ்சிட்டேன்..வெறும் சப்பாத்தி மட்டும் போடுறாங்க?” புலம்பிய அன்பில் !
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஷ், சிறையில் வழங்கப்படும் உணவைச் சாப்பிட்டதால் தனது உடல் எடை 4 கிலோ வரை குறைந்துவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி லஞ்சம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறையில் தன்னை மற்ற கைதிகளைப் போல நடத்துவதாக அவரது தரப்பு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அன்பில் மகேஷை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சுமார் ரூ.400 கோடி வரை பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதையடுத்து அன்பில் மகேஷ் புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, புழல் சிறையில் இருந்து அன்பில் மகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
“சிறை உணவால் 2 முதல் 4 கிலோ எடை குறைந்துவிட்டது”
அன்பில் மகேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அப்போது, புழல் சிறையில் முறையான உணவு வழங்கப்படவில்லை என்றும், மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனால் அன்பில் மகேஷின் உடல் எடை 2 முதல் 4 கிலோ வரை குறைந்துள்ளதாகவும், அவரால் அந்த உணவை சாப்பிட முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே, வீட்டில் தயாரிக்கப்படும் உணவை சிறையில் வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், தூங்கும்போதும் அறையில் விளக்கு எரியவிடப்படுவதாகவும், சிறையில் மருந்துகள் முறையாக வழங்கப்படவில்லை என்றும் அன்பில் மகேஷ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
“நான் எங்கும் தப்பி ஓட மாட்டேன். காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருகிறேன். மாநில நலனுக்காக நானும் எனது குடும்பமும் ரத்தத்தையும் வியர்வையையும் அளித்துள்ளோம். எனவே, மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும்” என்றும் அவரது தரப்பு வாதிட்டது.
அதேபோல், கைது செய்யப்படுவதற்கு முன்பே செப்டம்பர் 16-ம் தேதி சோதனை நடத்தப்பட்டதாகவும், செப்டம்பர் 18-ம் தேதி அன்பில் மகேஷிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அப்போது அவர் முழுமையாக ஒத்துழைத்ததாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
“வீட்டு உணவு குறித்து ஆய்வு செய்து முடிவு”
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், அன்பில் மகேஷுக்கு சிறையில் உரிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படும் எனத் தெரிவித்தார். அதே நேரத்தில், வீட்டு உணவு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டியிருப்பதால், அதுகுறித்து பதிலளிக்க அவகாசம் தேவை என்றும் கூறினார்.
இதற்கு அன்பில் மகேஷ் தரப்பு, “வீட்டு உணவு வழங்குவதற்குக்கூட அவகாசம் கேட்கிறார்கள்” என நீதிமன்றத்தில் முறையிட்டது.
3 நாட்கள் போலீஸ் காவல்
வழக்கின் விசாரணைக்காக அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் குறித்து நீதிபதி விசாரணை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, வழக்கில் தொடர்புடைய பணம் எங்கு சென்றது, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் சொத்து விவரங்கள், பினாமிகள் தொடர்பான தகவல்கள் உள்ளிட்டவற்றை விசாரிக்க வேண்டியுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அன்பில் மகேஷை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விசாரணையின்போது அவரை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்றும், தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனைகள் விதித்துள்ளார்.
மேலும், காவலில் இருக்கும் காலத்தில் தினமும் அவரது வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 2-ம் தேதிக்கு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?



