அன்பில் மகேஷைத் தொடர்ந்து சேகர் பாபு...அடுத்தடுத்து சிக்கும் திமுக மாஜிக்கள்!
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தியபோது, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஷை அக்டோபர் 27-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர், அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட இடத்தில் அவரது ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகளும் பெருமளவில் திரண்டனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையின்போது காவல்துறையினரை நோக்கி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அரசு அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யவிடாமல் தடுத்து இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு: அரசு ஊழியர்களை அவர்களின் பணியைச் செய்யவிடாமல் தடுத்து இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, இரண்டு முக்கிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவதூறாகப் பேசியதாக வழக்கு: சட்டப்பூர்வமாகக் கடமையாற்றிய காவல்துறையினரை நோக்கி பொதுவெளியில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேல் விசாரணை: சம்பவ இடத்தில் பதிவான காணொளி ஆதாரங்களின் அடிப்படையில், மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன போன்ற வழக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் காவல் அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புடையதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் மீது வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர, அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டபோது காவல்துறையினருக்கு எதிராகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்ட மேலும் 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?



