“கட்சியைப் பகடைக்காயாக்கிய சசிகலா”... பொ.செ. பதவிக்கு ஆப்பு வைத்த சக்ரவர்த்தி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது தங்களது கட்சியைப் பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம்சாட்டி, சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக அஇபுதமமுக தலைவர் சக்ரவர்த்தி அறிவித்துள்ளார்.

Oct 28, 2026 - 12:57
“கட்சியைப் பகடைக்காயாக்கிய சசிகலா”... பொ.செ. பதவிக்கு ஆப்பு வைத்த சக்ரவர்த்தி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அஇபுதமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ராமதாஸ் தலைமையிலான பாமகவுடன் கூட்டணி அமைத்து, சாத்தூர், முதுகுளத்தூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களைக் களமிறக்கியது. இந்தத் தொகுதிகளில் அஇபுதமமுக பெற்ற வாக்குகள் அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், தேர்தலுக்குப் பிறகு சசிகலாவுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, சென்னையில் உள்ள வளசரவாக்கம் அஇபுதமமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் நிறுவனர் சக்ரவர்த்தி, சசிகலாவைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

‘பகடைக்காயாக எங்கள் கட்சியைப் பயன்படுத்திவிட்டார்!’

செய்தியாளர்களிடம் பேசிய சக்ரவர்த்தி, “கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் கட்சி நடத்தி வருகிறோம். சசிகலா எங்கள் கட்சிக்கு வந்தபோது, அவர் மீது இருந்த மரியாதையின் அடிப்படையில் கட்சியைச் சிறப்பாக நடத்துவார் என்று நம்பினோம். அதனால்தான் அவரைப் பொதுச்செயலாளராக நியமித்துத் தேர்தலைச் சந்தித்தோம்.

தேர்தலில் சில தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்களுக்குக் கணிசமான வாக்குகள் கிடைத்தன. தேர்தல் முடிவுகள் திமுகவும் அதிமுகவும் எதிர்பார்க்காத வகையில் அமைந்தன. அந்தச் சூழலில் நாங்களும் தோல்வியைச் சந்தித்தோம் என்பதற்காக முடங்கிவிட மாட்டோம்.

ஆனால் தேர்தலுக்கு பிறகு சசிகலாவைச் சந்திக்கவே முடியவில்லை. கட்சியில் நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக இதுவரை ஒரு கூட்டத்தைக்கூட நடத்தவில்லை. பொதுச்செயலாளரைக் கலந்தாலோசிக்காமல் நானே கூட்டம் நடத்துவது சரியாக இருக்காது என்பதால், அவரைச் சந்தித்துப் பேச முயற்சி செய்தேன்.

ஆனால், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றபோது கூட என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. அவரது உதவியாளர் வந்து, ‘மேடம் வேலையாக இருக்கிறார்’ என்று பதில் சொல்வார். சில நேரங்களில் திவாகரனின் மகன் ஆனந்தை மட்டுமே சந்திக்க முடிந்தது.

பத்து முறையாவது சென்றிருப்பேன். ஆனால், வீட்டின் வாசலைத் தாண்டி உள்ளே செல்லக்கூட முடியவில்லை. ஒரு கட்சியின் தலைவராலேயே அதன் பொதுச்செயலாளரைச் சந்திக்க முடியவில்லை என்றால், அந்தக் கட்சி எப்படி இயங்கும்?

அப்போதுதான் எனக்குப் புரிந்தது. எங்கள் கட்சியை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே எங்கள் கட்சியில் இணைந்திருக்கிறார்கள். நினைத்தது ஓரளவுக்கு நடந்துவிட்டதால், இப்போது வீட்டிலேயே உட்கார்ந்துவிட்டார்கள்.

எங்கள் கட்சியை ஊறுகாயாகத் தொட்டுக்கொள்ள நாங்கள்தான் கிடைத்தோமா? இது சரிவராது என்பதால்தான் இப்போது அவரைப் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறேன். இந்த நடவடிக்கைக்குப் பிறகும் அவர் எந்த எதிர்வினையும் தெரிவிக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எதற்குமே வீட்டைவிட்டு வெளியே வர மாட்டேன் என்றால், ஏன் பொதுவாழ்க்கைக்கு வர வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் குறித்து என்ன சொன்னார்?

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் அஇபுதமமுக எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காதது குறித்த கேள்விக்குப் பதிலளித்த சக்ரவர்த்தி, “தென் மாவட்டங்களைப் போல தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் சசிகலா சொன்னால் கேட்கக்கூடிய ஆட்கள் இல்லை. ஒருவேளை இருந்திருந்தால், அங்கும் வேட்பாளர்களை நிறுத்தச் சொல்லியிருப்பாரோ என்னவோ?

ஆனால், அந்த இடைத்தேர்தல் சமயத்தில் தவெகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நான் கூறியிருந்தேன். ஏனென்றால், அந்த இடைத்தேர்தல் வருவதற்குக் காரணமே தவெகதான் என்று கருதியதால் அப்படிச் சொன்னேன்” என்றார்.

மேலும் சசிகலாவைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சக்ரவர்த்தி அறிவித்திருப்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைத்துக் களமிறங்கிய அஇபுதமமுகவில், தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த மோதல் அக்கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow