ஆந்திராவில் 14 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு இதுதான் காரணமா? மத்திய அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்...

ஓட்டுநர்கள் கவனக்குறைவாக இருந்ததால்தான் ரயில் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

Mar 3, 2024 - 10:17
ஆந்திராவில் 14 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு இதுதான் காரணமா? மத்திய அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்...

ஆந்திராவில் 14 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு, ரயிலின் ஓட்டுநர் போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தது தான் காரணம் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். 

ஆந்திராவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி விஜயநகர் மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ராயகடா பயணிகள் ரயில் நின்று கொண்டிருந்தது. ரயில் பாதையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்ததால் அந்த ரயில் அங்கே நின்று கொண்டிருந்தது. இதனால் ரயில்வே ஊழியர்கள் பிரச்னையை சீராக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த பலசா விரைவு ரயில், எதிர்பாராத விதமாக பயணிகள் ரயில் மீது மோதியது. 

இந்த பயங்கர விபத்தில், 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு பல பயணிகள் ரயில் பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டனர். இதில், ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் உட்பட  14 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த பகுதியில் தீயணைப்புப் படை, பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பின் சிக்கியவர்களை மீட்டனர். 

இதையடுத்து, ரயில் விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் இருவரும் கவனக்குறைவாக இருந்ததால்தான் ரயில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது, ரயில்வே விதிகளின்படி பழுதடைந்த தானியங்கி சிக்னல்களில் ரயில் இரண்டு நிமிடங்கள் நின்று, பின் 10 கி.மீ வேகத்தில்தான் புறப்பட வேண்டும். ஆனால் இதை ராயகடா ரயில் பின்பற்றதாததால்தான் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ரயிலை இயக்கிய ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் இருவரும் கிரிக்கெட் மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரயிலை இயக்கிய இருவரும் கிரிக்கெட் மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்ததால், இரண்டு சிக்னல்கள் பழுதாக இருந்ததை கவனிக்காமல் வேகமாக ரயிலை இயக்கியதாகவும், அதனால்தான் கட்டுப்பாட்டை மீறி ரயில் மோதியது எனவும் தெரிவித்துள்ளர். மேலும் விபத்து குறித்த விரிவான அறிக்கையை ரயில்வே போலீசார், மக்கள் முன் தாக்கல் செய்வார்கள் எனவும் அவர் கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow