மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி..! நாளைய ப்ளான் இதுதான்..
பிரதமர் நரேந்திர மோடி நாளை மீண்டும் தமிழ்நாடு வருகிறார்
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை மீண்டும் தமிழ்நாடு வருகிறார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் செவ்வாய் கிழமை திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற அரசுத் திட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொண்டார். இந்நிலையில் நாளை மீண்டும் அவர் தமிழ்நாடு வருகிறார். இதையொட்டி அவரது பயணத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பிரதமர் மோடி நாளை பிற்பகல் 1:15 மணிக்கு மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, சென்னைக்கு பிற்பகல் 2:45 மணிக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, கல்பாக்கம் ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று பிற்பகல் 3:30 முதல் மாலை 4:15 மணி வரை கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தைப் பார்வையிடுகிறார்.
அதனைத்தொடர்ந்து மீண்டும் கல்பாக்கம் ஹெலிபேடு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலைய ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நந்தனம் பொதுக்கூட்ட திடலுக்கு மாலை 5:10 மணிக்கு வருகிறார். மாலை 6:15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மாலை 6:20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக விமான நிலையம் செல்கிறார். மாலை 6:35 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தெலுங்கானாவிற்கு புறப்பட்டு செல்கிறார்.
What's Your Reaction?