அனிருத்துக்குக் கல்யாணக் கொண்டாட்டம் தொடங்கியாச்சு... திருமணம் எப்போது தெரியுமா?

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு கலாநிதி மாறன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

Oct 17, 2026 - 11:12
Oct 17, 2026 - 11:19
அனிருத்துக்குக் கல்யாணக் கொண்டாட்டம் தொடங்கியாச்சு... திருமணம் எப்போது தெரியுமா?

தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் வரிசையில், தனது துள்ளலான இசையால் இளைஞர்களை கவர்ந்து வருபவர் அனிருத். தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படப் பணிகளில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் அனிருத்தின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

குறிப்பாக, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகளும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவருமான காவ்யா மாறனும், அனிருத்தும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில், அனிருத் - காவ்யா மாறன் திருமணம் தொடர்பான தகவல்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. இருவருக்கும் வரும் நவம்பர் 11-ம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் இந்தத் திருமணம் செஷல்ஸ் நாட்டில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கிரீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடற்கரைகள், அழகிய கட்டிடங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகளுக்குப் பெயர் பெற்ற கிரீஸ், பிரமாண்டமான திருமண நிகழ்ச்சிகளுக்கான பிரபலமான இடமாகவும் இருந்து வருகிறது.

அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் இரு குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்காக நான்கு தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் இசைக்கோர்ப்பு பணிகள் உள்ளிட்ட தனது பணிகளை அனிருத் ஒத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் அவரது திருமணம் தொடர்பான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

சென்னையில் திருமண வரவேற்பு

இந்த நிலையில், நவம்பர் 21-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக, சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், தனது மனைவி காவேரி மாறனுடன் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் அவரைச் சந்தித்து, தங்களது மகள் காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும்  கலாநிதி மாறன் மற்றும் அனிருத்தின் பெற்றோர் ஆகியோர் திருமணத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவ்யா மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow