ஒரே நிறுவனத்திடம் நிதி பெற்ற திமுக, அதிமுக! லாட்டரி மார்ட்டினுடன் தொடர்பா?
தமிழ்நாட்டின் இரு முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் நிதி வழங்கிய அந்த நிறுவனம் எது? லாட்டரி உலகின் பிரபல புள்ளியுடன் அதற்கு என்ன தொடர்பு? வெளியான அதிர்ச்சி தகவல்.
கொல்கத்தாவைச் சேர்ந்த டைகர் அசோசியேட்ஸ் என்ற லாட்டரி நிறுவனம், 2025-26 நிதியாண்டில் மட்டும் இரு கட்சிகளுக்கும் சேர்த்து ரூ.260 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் இரு கட்சிகளும் தாக்கல் செய்துள்ள நிதி விவரங்களில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டில் வழங்கிய தொகையுடன் ஒப்பிடும்போது, இந்த நிறுவனத்தின் நன்கொடை இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்ல, 2025-26-ல் திமுகவும் அதிமுகவும் இணைந்து அறிவித்துள்ள ரூ.352.55 கோடி மொத்த நன்கொடையில், சுமார் 74 சதவீதம் ஒரே நிறுவனத்திடமிருந்து வந்துள்ளது. தமிழ்நாட்டி இரு முக்கிய அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரத்தில் ஒரு நிறுவனத்தின் பங்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
அதிமுகவுக்கு ரூ.135 கோடி... திமுகவுக்கு ரூ.125 கோடி!
டைகர் அசோசியேட்ஸ் நிறுவனம் 2024-25 நிதியாண்டில் இரு கட்சிகளுக்கும் சேர்த்து ரூ.110 கோடி வழங்கியிருந்தது. ஆனால், 2025-26-ல் அதிமுகவுக்கு ரூ.135 கோடியும், திமுகவுக்கு ரூ.125 கோடியும் வழங்கியுள்ளது. இதன்மூலம், இரண்டு நிதியாண்டுகளில் மட்டும் இரு கட்சிகளுக்கும் அந்த நிறுவனம் வழங்கிய மொத்தத் தொகை ரூ.370 கோடியாக உயர்ந்துள்ளது.
அதிமுக தாக்கல் செய்துள்ள நன்கொடை அறிக்கையின்படி, 2025-26 நிதியாண்டில் டைகர் அசோசியேட்ஸ் நிறுவனம் ஆறு தவணைகளில் ரூ.135 கோடியை வழங்கியுள்ளது. அதிமுக அறிவித்துள்ள மொத்த நன்கொடையான ரூ.161.36 கோடியில், இந்த நிறுவனத்தின் பங்கு மட்டும் சுமார் 84 சதவீதம்.
திமுகவின் நிதி அறிக்கையில், இதே நிறுவனம் 14 தவணைகளில் ரூ.125 கோடி வழங்கியிருப்பது பதிவாகியுள்ளது. திமுக அறிவித்துள்ள ரூ.191.19 கோடி மொத்த நன்கொடையில் இது 65 சதவீதத்துக்கும் அதிகமாகும்.
சாண்டியாகோ மார்ட்டினுடன் என்ன தொடர்பு?
டைகர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நன்கொடை விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்த நிறுவனத்துக்கும் லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினுக்கும் இடையிலான தொடர்பும் கவனம் பெற்றுள்ளது.
டைகர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நியமிக்கப்பட்ட கூட்டாளியான சுப்பையன் நாகராஜன், சாண்டியாகோ மார்ட்டினுடன் நீண்டகாலமாகத் தொடர்பில் இருப்பவர். நிறுவனப் பதிவுகளின்படி, இருவரும் மற்றொரு நிறுவனத்திலும் கூட்டாளிகளாக உள்ளனர்.
முன்னதாக, மார்ட்டினின் நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ், உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு, அந்தத் திட்டத்தின் கீழ் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக இருந்தது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டபோது, அந்த நிறுவனம் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி வழங்கியிருந்தது தெரியவந்தது.
ஆனால், டைகர் அசோசியேட்ஸ் மற்றும் ஃபியூச்சர் கேமிங் ஆகியவை தனித்தனி நிறுவனங்கள். டைகர் அசோசியேட்ஸ் வழங்கிய அரசியல் நன்கொடைகளை சாண்டியாகோ மார்ட்டின் தனிப்பட்ட முறையில் நிதியளித்தார் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ள விவரங்களில் இல்லை.
தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாகவும் நிதி!
டைகர் அசோசியேட்ஸ் மட்டுமல்லாமல், தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாகவும் திமுகவும் அதிமுகவும் நன்கொடைகளைப் பெற்றுள்ளன.
டிரையம்ப் எலெக்டோரல் டிரஸ்ட் திமுகவுக்கு ரூ.15 கோடியும், அதிமுகவுக்கு ரூ.5 கோடியும் வழங்கியுள்ளது. ஜெய்பாரத் எலெக்டோரல் டிரஸ்ட் திமுகவுக்கு ரூ.4 கோடியும், அதிமுகவுக்கு ரூ.3 கோடியும் அளித்துள்ளது. இதுதவிர, ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் திமுகவுக்கு மட்டும் ரூ.25 கோடி வழங்கியுள்ளது.
இந்த மூன்று தேர்தல் அறக்கட்டளைகளும் இரு கட்சிகளுக்கும் சேர்த்து வழங்கிய தொகை ரூ.52 கோடி. டைகர் அசோசியேட்ஸ் வழங்கிய ரூ.260 கோடியையும், இந்த மூன்று அறக்கட்டளைகளின் ரூ.52 கோடியையும் சேர்த்தால் மொத்தம் ரூ.312 கோடி கிடைக்கிறது. இது திமுகவும் அதிமுகவும் அறிவித்துள்ள மொத்த நன்கொடையில் சுமார் 88.5 சதவீதமாகும்.
திமுகவின் மொத்த நன்கொடை குறைந்தது ஏன்?
இதில் மற்றொரு சுவாரசியமான விஷயமும் இருக்கிறது. டைகர் அசோசியேட்ஸ் நிறுவனத்திடமிருந்து திமுக பெற்ற நன்கொடை ரூ.50 கோடியிலிருந்து ரூ.125 கோடியாக உயர்ந்திருந்தாலும், கட்சியின் மொத்த நன்கொடை கணிசமாகக் குறைந்துள்ளது.
2024-25 நிதியாண்டில் திமுக அறிவித்திருந்த மொத்த நன்கொடை ரூ.365.82 கோடி. ஆனால், 2025-26 நிதியாண்டில் அது ரூ.191.19 கோடியாகச் சரிந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் திமுக தாக்கல் செய்த அறிக்கையில், ரூ.300 கோடிக்கும் அதிகமான ரொக்க நன்கொடைகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை 'கட்சியின் வளர்ச்சி நிதி' என்ற பிரிவின் கீழ் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் கணிசமான தொகைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவில், நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது… திமுக ஆட்சியை இழந்தது. இந்த அரசியல் மாற்றத்துக்கு முந்தைய காலகட்டத்தில் இரு கட்சிகளும் பெற்ற நன்கொடைகளின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கைகள், தமிழ்நாட்டின் இரு முக்கிய அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரங்கள், பெரும் நன்கொடையாளர்களின் பங்களிப்பு மற்றும் தேர்தலுக்கு முந்தைய நிதிப் பரிமாற்றங்கள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
What's Your Reaction?

