2024 Election: கமல், விஜய் சேதுபதி, த்ரிஷா, பிரசாந்த்… ஜனநாயக கடைமையை ஆற்றிய பிரபலங்கள்!

2024 மக்களவைத் தேர்தலையொட்டி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, த்ரிஷா, பிரசாந்த் உள்ளிட்ட பலர் வாக்களித்தனர்.

Apr 19, 2024 - 15:12
2024 Election: கமல், விஜய் சேதுபதி, த்ரிஷா, பிரசாந்த்… ஜனநாயக கடைமையை ஆற்றிய பிரபலங்கள்!

சென்னை: 2024 தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தார் கமல்ஹாசன். இதற்காக மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று முதற்கட்ட தேர்தல் தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள பிரபலங்கள் காலை முதலே தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, கமல்ஹாசன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.  

அதேபோல், நடிகர் விஜய் சேதுபதி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட்டார். பிரசன்னா, சினேகா தம்பதியினரும் ஜோடியாக சென்று ஓட்டுப் போட்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். த்ரிஷா ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர் தியாகராய நகரில் ஓட்டுப் போட்டார். அவர்களைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தனது அம்மாவுடன் அசோக் நகரில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட்டார்.  

சென்னை தியாகராயநகரில் உள்ள வாக்குச் சாவடியில், நடிகர் பிரசாந்த், அவரது தந்தை தியாகராஜன் இருவரும் ஒன்றாக சென்று வாக்களித்தனர். நடிகை நமீதா தனது கணவருடன் ஜோடியாக சென்று வாக்களித்தார். நடிகர் நாசரும் அவரது மனைவியும் சென்னை வளசரவாக்கத்தில் ஓட்டுப் போட்டனர். அதேபோல், நடிகர் அரவிந்த் சாமியும் வளசரவாக்கத்தில் வாக்களித்தார். கவிஞரும் பாடலாசியருமான வைரமுத்து சூளைமேட்டில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.  

அதன்பின்னர் பேட்டியளித்த வைரமுத்து, “பொதுவாக குறை சொல்வது தேசிய குணமாக மாறிவிட்டது. மாறாக பாராட்டுவோம், கட்டுப்பாடு காத்த காவல்துறைக்கு பாராட்டுகள். கடைசி மலை கிராமம் வரைக்கும் வாக்கு இயந்திரங்களை கொண்டுச் சென்ற தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுகள். வாக்காளர்களுக்கு என்னுடையா பாராட்டுகள், இந்த நேரத்தில் நான் கூர்ந்து கவனித்தது, அடித்தட்டு மக்கள் காட்டும் ஆர்வம், படித்த மக்களிடம் இல்லையென என கருதுகிறேன். அவர்களும் முனைந்தால் தான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். முடியாட்சி, அரசாட்சி, ராணுவ ஆட்சி போன்றவைகளுக்கு முடிவுகட்ட ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தல் தான் சரியானது என நாம் நம்புகிறோம் கருதுகிறோம் ஜனநாயகத்தை காப்பதற்கு என்னென்ன முயற்சிகள் நாட்டில் நடைபெற வேண்டுமோ அதற்கெல்லாம் அடித்தளம் இந்தத் தேர்தல் முறை. எனவே இந்தியப் பெருமக்கள் வாக்காளப் பெருமக்கள் எல்லோரும் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது உரிமையை நிலை நாட்டிக்கொள்ள வேண்டும். இந்த கறுப்பு மை என்பது வேறொன்றும் அல்ல, நீங்கள் பெறுகிற உரிமையின் செலுத்துகிற அதிகாரத்தின் அச்சாரம்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow