ஹேமா கமிட்டி குறித்து பேச வேண்டியவர்கள் பேசிவிட்டார்கள்.... நடிகை அபிராமி பேச்சு!
நேபோடிசம் ஸ்டேஜை நான் தாண்டி விட்டேன், இப்ப இருக்கக்கூடிய நடிகர்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம் என நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் முருகன் இயக்கத்தில், பரத், அஞ்சலி நாயர், அபிராமி, பவித்ரா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இத்திரைப்படம் குறித்து மேடையில் பேசிய நடிகை அபிராமி, “சில கதைகளை கேட்கும் போது மட்டும் தான் எப்படியாவது இந்த படத்தை பண்ணணும், எத்தனை தடைகள் வந்தாலும் இந்த படத்தை விட்டுவிட கூடாதுனு தோணும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. இந்த கதை அனைவரையும் சிந்திக்க வைக்க கூடிய படம். இந்த படம் குறித்து பேசணும்னா முக்கியமான ஒருத்தர் பற்றி பேசியே ஆகணும். அவர் பெயர் தீக்ஷா. பிரசாந்த் முருகன் என்னிடம் வந்து கதை சொல்லும்போது, கதையில் எனக்கு ஒரு திருநங்கை மகள் கதாபாத்திரம் வருவதாக சொன்னார். அப்போது அவரிடம் நான் ஒரு கண்டிஷன் போட்டேன். அந்த கதாபாத்திரத்துக்கு உண்மையான திருநங்கையைதான் நடிக்க வைக்க வேண்டும். அப்படி நடிக்க வைத்தால் தான் இந்த கதையில் நடிக்க ஒப்பக் கொள்வேன் என்று கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டார். தீக்ஷா அவரது ரோலை மிகவும் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவருடனான எனது அனுபவம் மிகவும் அழகானது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் ஹேமா கமிட்டி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இதைப்பற்றி பேச வேண்டிய மேடை இது இல்லை. பாதிக்கப்பட்டவர்களும் பேச வேண்டியவர்களும் இதுகுறித்து பேசிவிட்டனர்” என கூறினார்.
இவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் பரத், “மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து சந்தோஷப்படும் நபர்கள் மிகக் குறைவு. நிறைய படங்களில் நான் கதாநாயகனாக தான் மட்டும் நடித்துள்ளேன். ஆனால் தற்போது ரசிகர்கள் கதையின் முக்கியத்துவத்தை பார்க்கிறார்கள். ஒரு படம் வெளியாவதற்கு முன்பு பட்ஜெட்டை பொறுத்து தான் அது பெரிய படமா சின்ன படமா என முடிவு செய்யப்படுகிறது. ஆனால் படம் வெளியான பிறகு சின்ன படமாக இருந்தால் கூட கதை நன்றாக இருந்தால் பெரிய படமாக மாற்றுகிறது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை உழைத்தால் காசு, திறமை இருந்தால் போதும். என்னிடம் நல்ல கதைகள் வருகிறது ஆனால் சரியான தயாரிப்பாளர்கள் அமைவதில்லை. ஒரு படம் நம்மால் ஓட வேண்டும், இல்லையென்றால் ஓடும் படத்தில் நம்ம இருக்க வேண்டும். நேபோடிசம் ஸ்டேஜை நான் தாண்டி விட்டேன், இப்ப இருக்கக்கூடிய நடிகர்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம். நான் சினிமாக்கள் வரும் பொழுது சினிமா ஓபனாக இருந்தது. வாரிசு நடிகர்களின் அழுத்தம் அந்த அளவிற்கு இல்லை” என தெரிவித்தார்.
What's Your Reaction?