பாஜகவின் கோட்டைக்கு செக்....பீகாரில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை...!

பாஜகவின் கோட்டையாக உள்ள பீகார் தொகுதியில் ஜன சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் முன்னிலை வகிப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Aug 3, 2026 - 12:00
Aug 3, 2026 - 11:36
பாஜகவின் கோட்டைக்கு செக்....பீகாரில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை...!

நீட் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் பாஜகவுக்கு மிக பெரிய பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் பாஜக ஆளும் மூன்று  மாநிலங்களில்  நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மாணவர் போராட்டத்திற்கு பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதாலும் இது பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் தேர்தல் என்பதாலும் இந்த தேர்தல் தேசியளவில் கவனம் ஈர்த்துள்ளது.

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பீகாரின் பாங்கிபூர் தொகுதியில் ஜன சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் முன்னிலை வகித்து வருவது தேசிய அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நீண்ட காலமாகவே பாஜகவின் கோட்டையாக இருந்து வந்த பாங்கிபூர் தொகுதியில், இதுவரை பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததே இல்லை. சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் நிதின் நபின் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் நேரடியாக களமிறங்கியதால் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முதலில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட அபிஷேக் குமார் சின்ஹா, வேட்புமனு தாக்கல் செய்த மறுநாளே தனிப்பட்ட காரணங்களை கூறி போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து பாஜக இளைஞரணி நிர்வாகி நீரஜ் குமார் சின்ஹாவை புதிய வேட்பாளராக அறிவித்தது. தற்போது நடைபெற்று வரும் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் உள்ளார்.

அதேபோல், மத்திய பிரதேசத்தின் டாட்டியா தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பாரதி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு பாஜக சார்பில் அஷுதோஷ் திவாரியும், காங்கிரஸ் சார்பில் குன்வர் கன்ஷ்யாம் சிங்கும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர்.

மத்திய பிரதேசத்தின் முக்கிய அமைச்சரான நரோத்தம் மிஸ்ராவின் செல்வாக்கு மிக்க தொகுதியாக டாட்டியா இருந்து வருகிறது. 2008 முதல் 2018 வரை தொடர்ந்து இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த நரோத்தம் மிஸ்ரா, 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தார். இதனால் இந்த இடைத்தேர்தலில் அவருக்கு பதிலாக அஷுதோஷ் திவாரிக்கு பாஜக வாய்ப்பு வழங்கியது.

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நரோத்தம் மிஸ்ரா ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த எதிர்ப்புகளைத் தாண்டி, தற்போது மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் டாட்டியா தொகுதியில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

இதற்கிடையில், குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த பாஜக தலைவர் யோகேஷ்பாய் நரந்தாஸ் படேல் மறைவால் இந்தத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் வடோதரா மாநகராட்சி கவுன்சிலர் சதீஷ் கோவிந்த்பாய் படேலும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் குஜராத் காங்கிரஸ் துணைத் தலைவர் பிகாபாய் ரபாரியும் களமிறங்கியுள்ளனர்.

2022 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 182 தொகுதிகளில் 156 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றி பெற்றிருந்த பாஜக, மஞ்சல்பூர் தொகுதியையும் தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக முயன்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் இந்தத் தொகுதியிலும் பாஜகவே முன்னிலையில் உள்ளது.

மாணவர் போராட்டங்களுக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தேசிய அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால் இறுதி முடிவுகள் மீது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow