சர்பத் ஜிகாத்.. பதஞ்சலி நிறுவன பாபா ராம்தேவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்
பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் “சர்பத் ஜிகாத்” என பாபா ராம்தேவ் குறிப்பிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் பாபா ராம்தேவிற்கு கடும் கண்டனத்தை இன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி தனது பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்பான குலாப் சர்பத்தை விளம்பரப்படுத்தும் போது ராம்தேவ் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். ஹம்தர்ட் என்கிற உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம் ரூஹ் அஃப்சா என்கிற சர்பத் பானத்தை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தனது பதஞ்சலி நிறுவன தயாரிப்பை மக்கள் ஏன் வாங்க வேண்டும் என ராம்தேவ் விளக்கும் காணொளியில், மறைமுகமாக ஹம்தர்ட் நிறுவன தயாரிப்பை மதரீதியான உணர்வுகளை தூண்டும் வகையில் விமர்சித்து பேசியிருந்தார்.
பாபா ராம்தேவுக்கு எதிராக ஹம்தர்ட் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு [Hamdard National Foundation India v. Patanjali Foods Limited & Anr] தொடர்ந்திருந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி அமித் பன்சால், “பாபா ராம்தேவ் குறிப்பிட்ட கருத்துகளை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாதது. இது நீதிமன்றத்தின் மனசாட்சியே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. காணொளிகளை நீக்க மறுத்தால், கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும்” என தெரிவித்தார். நீதிபதியின் உத்தரவினையடுத்து, “சர்பத் ஜிகாத்” தொடர்பாக பேசிய வீடியோக்களை சமூக ஊடகங்களிலிருந்து உடனடியாக நீக்க பாபா ராம்தேவ் தரப்பு ஒப்புக்கொண்டது.
இனி வரும் நாட்களில் ஹம்தர்ட் நிறுவனம் குறித்தோ, அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்தோ எவ்வித கருத்துகளையும் கூறவோ, சமூக ஊடகத்தளங்களில் வெளியிடவோ மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு ராம்தேவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை மே 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
என்ன தான் பேசினார் பாபா ராம்தேவ்?
'பதஞ்சலி தயாரிப்புகள்' நிறுவனம் தனது ஃபேஸ்புக் உட்பட அனைத்து சமூக வலைத்தள பக்கத்திலும் ஒரு வீடியோ ஒன்றினை பதிவிட்டு இருந்தது. அந்த வீடியோவிற்கு மேற்கோளாக “சர்பத் ஜிகாத் என்ற பெயரில் விற்கப்படும் கழிப்பறை சுத்தம் செய்யும் பானத்திலிருந்து உங்கள் குடும்பத்தையும் அப்பாவி குழந்தைகளையும் பாதுகாக்கவும். ஆரோக்கியம் நிறைந்த பதஞ்சலி சர்பத் மற்றும் பழச்சாறுகளை மட்டும் உங்கள் வீட்டிற்குள் நுழைய அனுமதியுங்கள்" என்று பதிவில் குறிப்பிட்டு இருந்தனர்.
வீடியோவில் பாபா ராம்தேவ் பதஞ்சலியின் குலாப் சர்பத்தை விளம்பரப்படுத்த பேசுகையில், சர்பத் ஜிகாத் என்கிற வார்த்தையினை பயன்படுத்தினார். மேலும் அவர் பேசுகையில், “கோடை காலத்தில் தாகத்தைத் தணிக்கிறேன் என்ற பெயரில், பொதுமக்கள் பெருமளவில் குளிர் பானங்களை குடிக்கிறார்கள். அவை அடிப்படையில் கழிப்பறை சுத்தம் செய்யும் பொருட்கள். ஒருபுறம் இப்படியென்றால், மறுபுறம் சர்பத்தை விற்கும் ஒரு நிறுவனமானது தான் ஈட்டும் வருமானத்தை மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் (இஸ்லாமிய போதனை கல்வி நிறுவனங்கள்) கட்ட பயன்படுத்துகிறது. பரவாயில்லை, அது அவர்களின் மதம். அதே நேரத்தில் நீங்கள் பதஞ்சலியின் சர்பத்தை வாங்கும் போது, அதன் வருமானங்கள் குருகுலங்கள், ஆச்சார்யகுளம், பதஞ்சலி பல்கலைக்கழகம் மற்றும் பாரதிய சிக்ஷா வாரியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
பாபா ராம்தேவின் “சர்பத் ஜிகாத்” கருத்துக்கு காங்கிரஸ் தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பாபா ராம்தேவ் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு போபாலிலுள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: 50 years of Microsoft: மைக்ரோசாப்ட்டுக்கு வயது 50.. இன்ப அதிர்ச்சி அளித்த பில்கேட்ஸ்!
What's Your Reaction?






