பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்
சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல், பெல்ஜியத்தில் இருந்து வந்தது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
அண்ணாநகர், ஜே.ஜே.நகர் நகரில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றனர். உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டு 13 பள்ளிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரியவந்தது.
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது. முதலில் ஒரே மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததை கண்டறிந்த காவல்துறை, அவை எங்கிருந்து வந்தது என்பது குறித்து ஆராய தொடங்கியது. இந்த நிலையில், இண்டர்போல் மூலம் சுவிட்சர்லாந்தை சேர்ந்த இ-மெயில் நிறுவனம் இந்திய புலன் விசாரணை அமைப்புகளுக்கு புதிய தகவலை ஒன்றை தெரிவித்துள்ளது. அதில் மின்னஞ்சல்கள் அனைத்தும் பெல்ஜியம் நாட்டு சர்வரில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பெல்ஜியம் நாட்டு ஐபி முகவரி, சர்வர் உள்ளிட்ட விவரங்களை வைத்து அந்த நாட்டிடம் விவரங்களை கேட்டு பெற காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த நபர் பெல்ஜியம் நாட்டில் இருந்து செயல்படுகிறாரா? அல்லது விபிஎன் சேவையை பயன்படுத்தி இ-மெயில் அனுப்பினாரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
What's Your Reaction?