தந்தையின் கனவை சுமக்கும் மகன்: யார் இந்த குட்டி சச்சின்?
மகாராஷ்டிர மாநிலம், பீட் என்கிற சிற்றூரில் பிறந்த சச்சின் தாஸ், தனது இரண்டாவது வயதிலேயே பேட் பிடிக்கத் தொடங்கிவிட்டார்.
அண்டர் 19 உலகக் கோப்பையில், இந்திய அணி ஃபைனலுக்குச் சென்றதில் சச்சின் 2.0 என்று அழைக்கப்படும் சச்சின் தாஸுக்கு முக்கியப் பங்குண்டு. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. 6வது பேட்டராக களமிறங்கிய சச்சின் தாஸ், அதிரடியாக விளையாடி 95 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அணியை சரிவிலிருந்து மீட்டு, வெற்றிக்கு வழிவகுத்தார். ஃபினிசராக களமிறங்கி இந்திய ரசிகர்களின் மனங்களை வென்ற சச்சின் தாஸ், கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல.
யார் இந்த சச்சின் தாஸ்?
மகாராஷ்டிர மாநிலம், பீட் என்கிற சிற்றூரில் பிறந்த சச்சின் தாஸ், தனது இரண்டாவது வயதிலேயே பேட் பிடிக்கத் தொடங்கிவிட்டார். இவருடைய அப்பா சஞ்சய் தாஸ் தீவிர சச்சின் ரசிகர். சச்சினைப் போலவே கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது அவருடைய கனவு. ஆனால் வசதி வாய்ப்பில்லாததால் கபடி விளையாட்டில் கவனம் செலுத்தினார்.
தேசிய அளவில் கபடி விளையாடினாலும் கிரிக்கெட் வீரராக முடியவில்லையே என்கிற ஏக்கம் சஞ்சய் தாஸை வாட்டியது. கிரிக்கெட்டில் தன்னால் சாதிக்க முடியாததை தன் மகன் சாதிக்க வேண்டும் என்று சஞ்சய் தாஸ் ஆசைப்பட்டார். ஆனால் அவர் மனைவி சுரேகாவோ, தன் மகன் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், சஞ்சய் தாஸ் ரிஸ்க் எடுக்க விரும்பினார்; எப்படியும் தன் மகன் சாதிப்பான் என்று நம்பினார்.
சச்சின் மீது தனக்குள்ள அபிமானத்தால் மகனுக்கு சச்சின் என்று பெயர் சூட்டினார். நான்கே வயதான தன் மகனை, அசார் ஷேக் என்பவர் நடத்திய கிரிக்கெட் அகாடமியில் சேர்த்துவிட்டார் சஞ்சய் தாஸ். அப்போதே ஒரு நாளைக்கு 1000 பந்துகள் வரை விளையாடி பயிற்சி எடுப்பாராம் சச்சின்; 12 வயதில் மகாராஷ்டிரா அண்டர் 14 அணியில் இடம்பெற்றார்.
சொந்த ஊரில் இருந்த கிரிக்கெட் மைதானத்தில் மேட்டிங் விக்கெட் மட்டுமே இருந்தது. சச்சின் உச்சத்தை தொட வேண்டுமென்றால் மேட்டிங் விக்கெட்டில் விளையாடினால் மட்டும் போதாது என்று சஞ்சய் தாஸ் நினைத்தார். இதனால், தனது நண்பர்களிடன் கடன் வாங்கி, கிரிக்கெட் அகாடமி ஆரம்பித்து, அதில் டர்ஃப் விக்கெட்டையும் நிறுவினார்.
மகாராஷ்டிரா அணிக்காக அண்டர் 16, அண்டர் 19 என்று படிப்படியாக முன்னேறினார் சச்சின் தாஸ். ஆனால், சஞ்சய் தாஸ் மட்டும் மகனின் முன்னேற்றத்தில் திருப்தி அடையவில்லை. சச்சின் தாஸ், பெரிய உயரத்துக்கு செல்ல வேண்டுமென்றால் இன்னும் கடினமாக பயிற்சியெடுக்க வேண்டுமென்று விரும்பினார். இதனால், தனது மகனுக்காக வீட்டையே ஒரு பயிற்சிக் களமாக மாற்றினார்.
காலையில் அகாடமியிலும் மாலையில் வீட்டிலுமாக பேட்டிங் பயிற்சி எடுக்கத் தொடங்கினார் சச்சின் தாஸ். கடின உழைக்குப்புக்கு கிடைத்தப் பலனாக அண்டர் 19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. டாப் ஆர்டர் பேட்டரான சச்சின் தாஸ், இந்த உலகக் கோப்பையில் ஃபினிசராக களமிறங்கி அசத்தி வருகிறார்.
சூப்பர் சிக்ஸ் சுற்றில் அயர்லாந்துக்கு எதிராக சதமடித்த சச்சின் தாஸ், அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்டர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தந்தையின் கனவை சுமக்கும் இந்த மகன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்று நம்புவோம்!
What's Your Reaction?