நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் CAA அமல் - அமித்ஷா திட்டவட்டம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Feb 10, 2024 - 15:37
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் CAA அமல் - அமித்ஷா திட்டவட்டம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் மத ரீதியிலான துன்புறுத்தலின் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்ததால் அவர்களுக்கு குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழித்து குடியுரிமை வழங்குவதாகக் கூறி மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் NCR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பலரது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது எனக்கூறி பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இச்சட்டத்தின்படி வெளியிட்டுள்ள பட்டியலில், இஸ்லாம் மதத்தினரும் இலங்கையினரும் இல்லாததை கண்டித்து எதிர்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் யாருடைய குடியுரிமையையும் CAA பறிக்காது என டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய உச்சி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எந்தக் குழப்பமும் இல்லாத வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன் செயல்படுத்தப்படும் எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். பிளவுகள் காரணமாக பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு அகதிகளாக வரும் சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்ததாகவும், அதனை தற்போது பாஜக நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்தார். வங்கதேசம், பாகிஸ்தானில் துன்புறுத்தப்படும் அகதிகளுக்காக CAA பயன்படுத்தப்படும் எனவும் இச்சட்டத்தால் யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், நம் நாட்டில் சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக நம் இஸ்லாமிய சமூகம் தூண்டிவிடப்படுகிறது என தெரிவித்த அவர், குடியுரிமையை பறிக்கும் எந்த ஏற்பாடும் அச்சட்டத்தில் இல்லை எனவும் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow