கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகரானார் பிராவோ

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஆலோசகராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டிருக்கிறார். 

Sep 27, 2024 - 12:32
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகரானார் பிராவோ
dwyane bravo

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் தனது மூன்றாவது கோப்பையைக் கைப்பற்றியது. கொல்கத்தா அணியின் மிகப்பெரும் பலமாக இருந்தவர் கௌதம் கம்பீர்தான். 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் கொல்கத்தா அணி இவரது தலைமையில்தான் கோப்பையைக் கைப்பற்றியது. இவர் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பிறகு இந்த ஆண்டும் கொல்கத்தா கோப்பையைக் கைப்பற்றியது. ஆகவே இந்த அணியின் மிகப்பெரும் பலமாக விளங்கிய கௌதம் கம்பீர் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு விட்டதால் கொல்கத்தா அணிக்கு புதிய ஆலோசகரை நியமிக்க வேண்டிய தேவை உருவானது. 

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஆல்ரவுண்டராகத் திகழ்ந்த டுவைன் ப்ராவோவை புதிய ஆலோசகராக நியமித்திருக்கிறது கொல்கத்தா அணி. இது குறித்த அறிவிப்பை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறது. 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2021ம் ஆண்டு ஓய்வுபெற்ற பிராவோ, மேஜர் லீக் கிரிக்கெட் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர்களில் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னராகத்தான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ப்ராவோ தனது ஓய்வை அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்காக பிராவோ விளையாடியுள்ளார். குறிப்பாகச் சொல்லப்போனால் அதிக காலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ப்ராவோ சென்னை ரசிகர்களின் விருப்பத்துக்குரிய வீரராக இருந்தார். 2023ம் ஆண்டில் இருந்து அவர் சென்னை அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். சிறந்த ஆல் ரவுண்டரான ப்ராவோவின் வருகை கொல்கத்தா அணிக்கு பலம் சேர்க்கும் என நம்பப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow