ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் அசத்தல் சதம்; கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி
ஹர்மன்பிரீத் கவுர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா இருவரும் நிலைத்து நின்று, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை பதம் பார்த்தது. தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா, 67 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைச்சதம் கடந்தார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில், ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரின் அசத்தல் சதத்தால் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க பெண்கள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் அபார வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் ஃபீல்டிங்கை தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 38 பந்துகளில் 20 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய தயாளன் ஹேமலதா 41 பந்துகளில் 24 ரன்களிலும் வெளியேறினர். இதனால், இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்து சுமாரான தொடக்கத்தை கொடுத்தது.
அதன் பின்னர் களமிறங்கிய ஹர்மன்பிரீத் கவுர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா இருவரும் நிலைத்து நின்று, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை பதம் பார்த்தது. தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா, 67 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைச்சதம் கடந்தார்.
அதன் பின்னர் அதிரடியாக ஆடிய மந்தனா 103 பந்துகளில் தனது 7ஆவது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் (84) 7 சதத்தை நிறைவு செய்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். மேலும், இந்தியாவிற்காக அதிக சதங்கள் விளாசியவர் பட்டியலில் மிதாலி ராஜின் சாதனையை சமன் செய்தார். மந்தனா 136 [18 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] ரன்கள் எடுத்திருந்தபோது, மிலாபா பந்துவீச்சில் வெளியேறினார்.
அடுத்த களமிறங்கிய ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 49.2 ஓவரில் 310 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹர்மன்பிரீத் கவுர் 84 பந்துகளில் 88 ரன்கள் எடுத்திருந்தார். இதனால், அவர் சதத்தை எட்டுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
அப்போது, பேட்டிங் முனையில் இருந்த ஹர்மன்பிரீத் கவுர் தொடர்ந்து 4, 6, 4 ரன்களை விளாச 87 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். ரிச்சா கோஷ் 13 பந்துகளில் [3 பவுண்டரி, ஒரு சிக்ஸர்] 25 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் வீராங்கனைகள் முதலிலே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். டஸ்மின் ப்ரிட்ஸ் (5), அன்னேக் போச் (18), சுனே லஸ் (12) என அடுத்தடுத்து வெளியேறியதால், 14.2 ஓவர்களில் 67 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
அதன் பின் ஜோடி சேர்ந்த லாரா வோல்வார்ட், மரிஷன்னே காப் இணை அபாரமாக விளையாடியது. சிறப்பாக விளையாடி இருவரும் தங்களது சதத்தினை நிறைவு செய்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய வீராங்கனைகள் தினறினர். பின்னர், அணியின் எண்ணிக்கை 251 ஆக இருந்தபோது, மரிஷன்னே காப் 114 ரன்களில் வெளியேறினார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவரை இந்திய வீராங்கனை பூஜா வஸ்ட்ராகர் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன்னும், இரண்டாவது பந்தில் பவுண்டரியும் அடிக்கப்பட்டது. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் பூஜா வஸ்ட்ராகர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐந்தாவது பந்தில் ஒரு ரன் மட்டும் எடுக்கப்பட, கடைசிப்பந்தில் 5 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த பந்தை சிறப்பாக வீசி பூஜா வஸ்ட்ராகர் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். இதனால், இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
What's Your Reaction?