எங்க குழந்தை உங்க எண்டர்டெயின்மெண்ட் இல்ல.. குட்டி பும்ரா கிண்டல் குறித்து சஞ்சனா காட்டம்
”எங்கள் மகன் உங்கள் பொழுதுபோக்குக்கான தலைப்பு அல்ல” என பேபி அங்கட் பும்ராவை கேலி செய்தவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன்.

நேற்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியினை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
அபாரமாக பந்து வீசிய மும்பை அணியின் பும்ரா 4 ஓவர்களுக்கு 22 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மும்பை வசம் கொண்டு வந்தார். 16 வது ஓவரினை வீசிய பும்ரா வெறும் 2 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரே ஒவரில் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அப்போது, கேமரா பும்ராவின் குழந்தை நோக்கி நகர்ந்தது. பெரியளவில் எந்த ரியாக்ஷனும் குட்டி பும்ரா காட்டவில்லை. இதை பலர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் மீம் வடிவில் கிரியேட் செய்து எள்ளி நகையாடினர்.
இந்நிலையில் தான், இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன். இதுத்தொடர்பாக அவர் இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு-
”எங்கள் மகன் உங்கள் பொழுதுபோக்குக்கான தலைப்பு அல்ல. இணையம் ஒரு இழிவான, மோசமான இடம் என்பதால், அங்கத்தை (பும்ராவின் மகன் பெயர்) சமூக ஊடகங்களிலிருந்து விலக்கி வைக்க ஜஸ்பிரித்தும் நானும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். கேமராக்கள் நிறைந்த கிரிக்கெட் மைதானத்திற்கு ஒரு குழந்தையை அழைத்து வருவதன் தாக்கங்களை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். ஆனால், ஜஸ்பிரித்தை ஆதரிக்கவே நானும் அங்கத்தும் அங்கு இருந்தோம் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.
எங்கள் மகன் வைரலான இணைய உள்ளடக்கம் அல்லது தேசிய செய்திகளில் எங்களுக்கு விருப்பமில்லை. அவன் வீடியோவில் தெரிந்த 3 வினாடி காட்சிகளை கொண்டு அங்கத் யார்? அவரது பிரச்சனை என்ன? என பலர் கேள்வி எழுப்புவது வருத்தத்தை தருகிறது. ஒன்றரை வயது நிரம்பிய அங்கத் பும்ராவிடம், "மனச்சோர்வு" போன்ற மனநலம் தொடர்பான சொற்களை சிலர் பயன்படுத்துகிறார்கள். எங்கள் மகனைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது, எங்கள் வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாது, உங்கள் கருத்துக்களை ஆன்லைனில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜஸ்பிரித் பும்ரா கடந்த 2021 ஆம் ஆண்டு சஞ்சனா கணேசனை கரம் பிடித்தார். இவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு அங்கட் பும்ரா என (Angad Bumrah) என பெயரிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






