ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?
உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம், நச்சுகளை வெளியேற்றுதல், மற்றும் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கத் குறிப்பிட்ட அளவில் தண்ணீர் அவசியம்.
ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?
- மானா பாஸ்கரன்
‘தண்ணீர் ஏன் குடிக்க வேண்டும்?’ என்பது என்ன கேள்வி என்று இதனை வாசிப்பவர்கள் நினைக்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலை படியுங்கள். இந்த கேள்வி எவ்வளவு முக்கியமானது என்பது புரிந்துவிடும்.
நமது உடம்பில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, அந்த வெப்பத்தைத் தாங்க தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. நாம் அருந்தும் தண்ணீரானது உடல் வெப்பநிலை மற்றும் ரத்த அழுத்தத்தை பராமரிக்கஅவசியமாகும். நம் உடம்பில் இருந்து நச்சுகளை வெளியேற்ற தண்ணீர்தான் நமக்கு உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்துவதுடன், நமது மூட்டுகளை மென்மையாக்க நாம் அவசியம் தண்ணீர் அருந்தித்தான் ஆக வேண்டும்.
உடலில் சோடியம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஹார்மோன்கள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துகளின் மென்மையான சமநிலையை பராமரிக்க தண்ணீர்தான் கை கொடுக்கிறது. தொடர்ந்து தண்ணீர் குடிப்பவர்களுக்கு பிற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஓர் ஆய்வு சொல்கிறது.
தினமும் காலையில் எழுந்தவுடன் வாய் மற்றும் பற்களை துலக்கியதும் தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் சிறுநீர் தெளிவானதாகவோ, வெளிர் மஞ்சள் நிறமாகவோ இருக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமானது. இதற்கு மாறாக, சிறுநீர் அடர் நிறமாக இருந்தால், நீங்கள் போதுமான அளவுக்கு நீர் அருந்தவில்லை என்பதற்கான அறிகுறி அதுவாகும்.
உதடுகள் வறண்டு போனதற்கான அறிகுறிகள் தோன்றுவது நீங்கள் உடலுக்குத் தேவையான நீரை அருந்தவில்லை என்று அர்த்தமாகும். தலைச்சுற்றல், அல்லது சோர்வாக இருப்பது மாதிரி நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு உடனடியாகத் தேவை தண்ணீர்தான். போதுமான அளவில் தண்ணீர் அருந்தவில்லை என்றால் அது தலைவலியைக் கூட ஏற்படுத்தலாம்.
நீங்கள் ஆணாக இருந்தால் தினமும் உங்களுக்கு 2,600 மிலி தண்ணீர் அவசியமாகும். திரவங்கள் தேவை. அதுவே பெண்களாக இருந்தால் தினமும் 2,100 மிலி தண்ணீர் தேவையாகும். ஒருவேளை கருவுற்ற பெண்ணாக இருந்தாலோ, தாய்ப்பால் கொடுக்கும் தாயாக இருந்தாலோ 2,100 மிலி தண்ணீர் போதுமானதாக இருக்காது. இன்னும் கூடுதலாக தண்ணீர் தேவைப்படும்.
நமது உடலுக்குத் தேவையான நீரில் ஐந்தில் ஒரு பங்கானது நாம் உண்ணும் உணவிலிருந்தே கிடைத்துவிடும். மீதமுள்ள நான்கு பங்கு நீரை நாம் அருந்துவதில் இருந்துதான் உடல் பெற முடியும்.
தொழில் சார்ந்து உங்கள் பணி என்ன என்பதை பொறுத்து உங்களுக்குத் தேவையான தண்ணீர் தேவை நிர்ணயிக்கப்பட வேண்டும். வயதானவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது இயல்பாகும். வயதின் காரணமாக முதியவர்களுக்கு இயற்கையாகவே தாகம் குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம். எனவே முதியவர்கள் நினைவில் வைத்திருந்து போதுமான அளவுக்கு தொடர்ந்து நீர் அருந்துவது அவசியம்.
நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் நம் உடம்பில் உள்ள ரத்தத்தில் கரைந்த பொருட்களின் செறிவை தொடர்ந்து கண்காணித்து வரரும். ஒருவேளை ரத்தத்தில் இருக்கும் நீரின் அளவு குறைந்தால், பொருட்களின் செறிவு அதிகரித்துவிடும். ஹைபோதாலமஸ் இந்த மாற்றத்தை உடனடியாகக் கண்டறிந்துவிடும். இதைத் தொடர்ந்து அது, நமது மூளையில் அமைந்திருக்கிற தாக மையத்திற்கு சில அறிகுறிகளை விரைந்து அனுப்பும். அப்போதுதான் நாம் தண்ணீர் அருந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.
குடல் ஆரோக்கியமாக இருக்கவும், செரிமான மண்டலங்கள் தங்கள் பணிகளை ஆரோக்கியமாக செயல்படுத்தவும் தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. நமது உடம்பில் தண்ணீர் இழப்பின் காரணமாக, குடல் ஆரோக்கியம் குன்றி அதுவே மலச்சிக்கலாக அடையாளப்படுத்தப்படுகிறது. எனவே தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்துவது மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.
What's Your Reaction?

