அமித்ஷா பேரணியில் கொடி பிடித்த சிறுமிகள்.. பாய்ந்த வழக்கு.. தெலங்கானா போலீஸ் அதிரடி

May 4, 2024 - 15:23
அமித்ஷா பேரணியில் கொடி பிடித்த சிறுமிகள்.. பாய்ந்த வழக்கு.. தெலங்கானா போலீஸ் அதிரடி

தெலங்கானாவில் பேரணியின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளிலும் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 89 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வரும் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், தெலங்கானாவில் வரும் 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கலாசாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் ஹைதராபாத் தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா ஆகியோர் வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மேடையில் பாஜக கொடியை பிடித்தபடி 3 சிறுமிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தை விதியின்படி பரப்புரையில் சிறார்களை ஈடுபடுத்தக் கூடாது என்று உள்ள நிலையில் பாஜக பரப்புரையில் சிறுமிகளை ஈடுபடுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் நிரஞ்சன் ரெட்டி மொஹல்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188-ன் கீழ் அமித் ஷா, கிஷன் ரெட்டி, மாதவி லதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow