சென்னையில் கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை: தலைமறைவான கோச்..!

சென்னை கண்ணகி நகரில் 17 வயது கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பயிற்சியாளர் ராஜி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை: தலைமறைவான கோச்..!

சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அவரது கபடி பயிற்சியாளர் ராஜி மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பயிற்சியாளரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜியிடம் கபடி பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை மூன்று முறை அந்த சிறுமிக்கு ராஜி பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி, செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பயிற்சியாளர் ராஜி தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவரது கபடி அணியில் பயிற்சி பெற்ற அனைத்து வீராங்கனைகளிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பிற வீராங்கனைகளும் பாதிக்கப்பட்டுள்ளனரா? 

17 வயது வீராங்கனையைப் போல வேறு யாரேனும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனரா என்பதை கண்டறியும் வகையில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ராஜியிடம் பயிற்சி பெற்று மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனைகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மோசடி புகாரும் எழுந்துள்ளது:

இதற்கிடையில், கபடி உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீராங்கனை கார்த்திகாவின் தாயார் சரண்யா, பயிற்சியாளர் ராஜி மீது தனியாக மோசடி புகாரும் அளித்துள்ளார். தனது மகள் விளையாட்டின் மூலம் சம்பாதித்த பணத்தை ராஜி மோசடி செய்து பெற்றுக்கொண்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகார் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேவேளையில், கபடி வீராங்கனை கார்த்திகா பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், தனது தாயார்தான் தன்னை துன்புறுத்தியதாகவும், பயிற்சியாளர் ராஜி மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அந்த ஆடியோவின் உண்மைத்தன்மையை அதிகாரப்பூர்வமாக காவல்துறை உறுதிப்படுத்தவில்லை.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜியை விரைவில் கைது செய்து, அனைத்து கோணங்களிலும் விரிவான விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow