திருவள்ளூரில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்... 5 பேர் கைது!

இவ்வழக்கில் மொத்தம் 6 பேரைக் கைது செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Apr 30, 2024 - 19:48
திருவள்ளூரில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்... 5 பேர் கைது!

திருவள்ளூர் அருகே இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நேற்று (ஏப்ரல் 29) அதிகாலை, ஆள் நடமாட்டம் மிகுந்த பஜார் பகுதியில் இளைஞர் ஒருவர், கைகள் மற்றும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், துணியில் சுற்றப்பட்டு, சடலமாகக் கிடந்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்த மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதே வேளையில், சோழவரம் அருகே பெருங்காவூர் பகுதியில் சுடுகாட்டில், சமாதி ஒன்றின் மீது, மனித தலை ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து விசாரித்ததில், அது மீஞ்சூரில் கொலை செய்யப்பட்டவரின் தலை என்பது தெரிய வந்தது. 

சடலமாக மீட்கப்பட்டவர் உடல் ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சோழவரத்தில் கண்டெடுக்கப்பட்ட தலையும் அனுப்பப்பட்டது. மேலும், காவல்துறையினர் தனிப்படை அமைத்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்ட நபர் வஞ்சிவாக்கம் பகுதியை சேர்ந்த அஸ்வின் குமார் (22) என்பது தெரியவந்தது.

கடந்தாண்டு செங்குன்றத்தை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில், 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தக் கொலை நடத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வந்தனர். அதன் அடிப்படையில் வைதிகைமேடு பகுதியை சேர்ந்த அஜீத் (எ) அவ்ஜா (21) என்ற இளைஞரை மீஞ்சூர் காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அப்போது, கொலை செய்யப்பட்ட அஸ்வின், தமது உறவுக்கார பெண்ணை காதலித்து விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

காவல்துறையினரிடம் அஜ்வா சொன்ன தகவலின் அடிப்படையில், மோகன், கார்த்திக், தேவராஜ் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன்மூலம் இவ்வழக்கில் மொத்தம் 6 பேரைக் கைது செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow