ஆணவக்கொலையான பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை... கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு.. சூடுபிடிக்கும் வழக்கு...

Apr 24, 2024 - 13:06
ஆணவக்கொலையான பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை... கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு.. சூடுபிடிக்கும் வழக்கு...

சென்னையில், ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கோட்டாட்சியர் விசாரணை நடத்தவும், உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி இரவு 8 மணி அளவில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்பவர், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி அவர் உயிரிழந்து கிடந்தது, அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், அவர் ஆறு மாதங்களுக்கு முன் ஷர்மிளா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டதும், அவர் பட்டியலினத்தவர் என்பதால், அது பிடிக்காத ஷர்மிளாவின் உறவினர்கள் பிரவீனை ஆணவப் படுகொலை செய்ததும் தெரிய வந்தது. 

தொடர்ந்து நடந்த விசாரணையில், ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் என்ற குட்டி அப்பு என்பவர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவர்களிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா, கடந்த 14-ம் தேதி, அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்கொலைக்கு முயன்றபோது, கழுத்துப் பகுதியில் இருந்த நரம்புகள் பாதிக்கப்பட்டதால், ஷர்மிளா கோமா நிலைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து அவரை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே, கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக பள்ளிக்கரணை காவல்துறையினர் செயல்பட்டு வருவதாக, ஷர்மிளா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், கோமாவில் இருந்த அவர் உயிரிழந்தது, இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியது. அதோடு, ஷர்மிளா எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. அதில், தனது மரணத்திற்கு துரை, சரளா, நரேஷ், தினேஷ் ஆகிய நான்கு பேர் மட்டுமே காரணம் என்று ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ஷர்மிளாவின் பெற்றோரான துரை, சரளா மற்றும் அவரது அண்ணன்களான நரேஷ், தினேஷ் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கினர். 

இந்த நிலையில், ஷர்மிளா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷர்மிளாவின் உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow