கழுத்தில் கத்தியை வைத்த கும்பல்..அதிகாலையில் அரங்கேறிய கொள்ளை..திருச்செந்தூரில் அதிர்ச்சி சம்பவம்..

திருச்செந்தூர் அருகே அதிகாலையில் வீட்டின் கதவை உடைத்து உள்ள புகுந்த மர்மநபர்கள் பெண்கள், குழந்தைகள் கழுத்தில் பயங்கர ஆயுதங்களை வைத்து மிரட்டி  நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

May 6, 2024 - 20:52
கழுத்தில் கத்தியை வைத்த கும்பல்..அதிகாலையில் அரங்கேறிய கொள்ளை..திருச்செந்தூரில் அதிர்ச்சி சம்பவம்..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் யோவான்ராஜ். இவருக்கு சுதாசெல்வி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். யோவான்ராஜ்  திருச்செந்தூர் சண்புகபுரத்தில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.  தனியார் விடுதியில் வேலை பார்க்கும் யோவான்ராஜ், வீட்டின் முன்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். 

இந்தநிலையில் யோவான்ராஜ் வீட்டிற்கு அவரது மனைவி சுதாவின் உறவினர்கள் வந்துள்ளனர். வழக்கமாக இரவில் யோவான்ராஜ் விடுதிக்கு வேலைக்குச் செல்வார். அந்த வகையில் நேற்று யோவான்ராஜ் இரவில் விடுதிக்கு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் பெண்கள், குழந்தைகள் மட்டும் தனியே இருப்பதை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல், அதிகாலை சுமார் 2.30 மணிக்கு வீட்டின் கதவை உடைத்து முகமூடி அணிந்து வாள், அரிவாள், கம்பி ஆகிய பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்துள்ளனர். 

இதையடுத்து வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகளின் கழுத்தில் அரிவாள், கத்தி ஆகியவற்றை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம்  3 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்த்ராஜ், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி நேரில் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர் கைரேகை போன்ற தடையங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் வீடு புகுந்து பெண்கள் குழந்தைகள் கழுத்தில் கொடூர ஆயுதங்களை வைத்து மிரட்டி தங்க நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow