ஒன்றரை அடி துவாரம்… 4 நாட்களாக யாருக்கும் தெரியாத மரணம்! மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி!

சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில், பாழடைந்த அறையில் இருந்த ஒன்றரை அடி துவாரத்தில் விழுந்து 55 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Oct 13, 2026 - 19:15
ஒன்றரை அடி துவாரம்… 4 நாட்களாக யாருக்கும் தெரியாத மரணம்! மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி!

சென்னை பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்த வெங்கடேசனின் மனைவி விஜயா (55). கடந்த 8-ம் தேதி, சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்குச் செல்வதற்காக, தனது மகள் காயத்ரியுடன் வேளச்சேரி – கடற்கரை செல்லும் பறக்கும் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

அப்போது விஜயாவுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று மகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர்.

ரயில் நிலையத்தில் ஓரிடத்தில் மகள் காயத்ரியை அமர வைத்துவிட்டு, இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்கிருந்த பாழடைந்த அறைக்குள் விஜயா சென்றுள்ளார். ஆனால், அவர் சென்றதை மகள் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

விஜயா நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் காயத்ரி பதற்றமடைந்துள்ளார். தாயை ரயில் நிலையம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் மாயமான விஜயாவைத் தேடி வந்தனர். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று(அக்.,12) மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தின் கீழ்தளத்தில் உள்ள பாழடைந்த அறையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரயில்வே ஊழியர்களும் போலீசாரும் அறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 8-ம் தேதி காணாமல் போன விஜயா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரயில் நிலையத்தின் மேல் தளத்தில் உள்ள பாழடைந்த அறையில் சுமார் ஒன்றரை அடி அளவிலான துவாரம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

அறை இருட்டாக இருந்ததால் அந்தத் துவாரத்தைச் சரியாகக் கவனிக்காமல் விஜயா நிலைதடுமாறி விழுந்திருக்கலாம் என்றும், அதன் வழியாக கீழ்தளத்தில் உள்ள பாழடைந்த அறைக்குள் விழுந்ததில் உயிரிழந்திருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

நான்கு நாட்களாக மாயமான பெண், யாரும் எளிதில் கவனிக்க முடியாத பாழடைந்த அறைக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து நடத்துவதற்காக, வழக்கை மயிலாப்பூர் போலீசார் திருவான்மியூர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow