ஜெயக்குமார் வழக்கில் புதிய முடிச்சு... சிக்கிய கடனாளிகள் பட்டியல்.. அச்சுறுத்தல் + கடன் பட்டியல் = ...?

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் பற்றிய விசாரணையில் திடீர் திருப்பமாக, அவர் தன்னிடம் கடன் வாங்கியவர்களின் விவரங்களை குறிப்பிட்டு மருமகனுக்கு எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.

May 5, 2024 - 13:47
ஜெயக்குமார் வழக்கில் புதிய முடிச்சு...  சிக்கிய கடனாளிகள் பட்டியல்..  அச்சுறுத்தல் + கடன் பட்டியல் =  ...?

முன்னதாக உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசுக்கு எழுதிய கடிதம் கிடைத்த நிலையில், இந்த கடிதத்தில் காங்கிரஸ் முக்கிய புள்ளிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. உயிருக்கு அச்சுறுத்தல் என்ற கடிதத்திற்கும், கடன் வாங்கியவர்களின் பட்டியல் கடிதத்திற்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் புலனாய்வு செய்கின்றனர்.

மே 4 ஆம் தேதி காலை நெல்லை மாவட்டம் உவரி பகுதியில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமார் தனசிங்கின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. கடந்த 2 ஆம் தேதி மாலை வீட்டை விட்டுச்சென்றவர், திரும்பி வரவில்லை என அவரது மகன் போலீசில் புகாரளிந்திருந்த நிலையில், இவ்வாறு நடந்துள்ளது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், கொலையா தற்கொலையா என தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

இதனிடையே, தன்னை யாரோ கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என அவர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி போலீசுக்கு எழுதிய கடிதம் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி ஜெயகுமார் தனது மருமகனுக்கு எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.

அதில், மருமகனை அன்போடு குறிப்பிட்டு கடிதம் எழுதிய அவர், தன்னிடம் பல முக்கிய நபர்கள் லட்சக்கணக்கில் கடன் பெற்றுள்ளதாகவும், அதனை வட்டியுடன் வாங்க வேண்டும் என 19 நபர்களின் பெயரை பட்டியலிட்டுள்ளார். 

குறிப்பாக, காங்கிரசில் நெல்லை மாவட்டத்தில் முக்கிய புள்ளியும், நாங்குநேரி எம்.எல்.ஏவுமான ரூபி.மனோகரனையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், ரூபி.மனோகரனிடம் 78 லட்சம் ரூபாய் மற்றும் முன்னாள் எம்பி கே.வி.தங்கபாலு, ரூபி. மனோகரனிடம் இருந்து வாங்கிக்கொள்ளும்படி கூறிய 11 லட்சம் ரூபாயும் சேர்த்து மொத்தமாக 89 லட்சம் ரூபாயை வழக்கு தொடர்ந்து பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, நானும் ஜெயக்குமாரும் அண்ணன் தம்பி போல, அவர் இறந்த வழக்கில் தன்னை தொடர்ப்புப்படுத்தி வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என ரூபி.மனோகரன், ஜெயகுமார் இறப்புக்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதேவேளையில் ரூபி.மனோகரன் பெரிய தொகை கடன் வாங்கியுள்ளதாக ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இறுதியாக கடிதத்தில், கடன் பெற்றவர்களின் விவரங்களை தெரிவித்து விட்டு, இவர்கள் யாரையும் தனது குடும்பத்தினர் பழிவாங்க வேண்டாம் என்றும், சட்டம் தன் கடமையைச் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். 

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஜெயக்குமார் எழுதிய முதல் கடிதத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், காங்கிரஸ் முக்கிய புள்ளிகளுக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுத்ததாகவும், சட்டம் தனது கடமையை செய்யும் என்ற கோட்ஸ்சும் வழக்கில் புதிய முடிச்சை போட்டுள்ளது.  இருப்பினும் சட்டம் தன் கடமையை செய்யும்...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow