ஒத்தக்கடையில் மீண்டும் ஒரு சம்பவம்... இரவில் உலாவும் அரக்கர்கள்.. வெளியே செல்லவே அஞ்சும் மக்கள்
காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் சில நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள், சாலையில் சென்றவரை தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒத்தக்கடையில் தொடரும் இதுபோன்ற சம்பவத்தால் இரவில் வெளியே செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மதுபோதையில் பைக்கில் சென்றவரை சரமாரியாக தாக்கி மண்டையை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதே ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் உலாவிக்கொண்டிருந்த கும்பல் சாலையில் சென்றவரை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.
ஒத்தக்கடையில் அதிகளவில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இதுபோன்ற போதை நடமாட்டத்துடன் திரியும் இளைஞர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் சில நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
இருப்பினும் தொடர்ந்து இதுபோன்று அரங்கேறும் இதுபோன்ற சம்பவங்களால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்லவே அஞ்சுகின்றனர். இதனை காவல்துறை கவனத்தில் கொண்டு அப்பகுதியில் போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?