சி.எஸ்.கே.வில் கலக்கப்போகும் ஆர்.ஆர்.ஆர்.. ஒன்று சேர்ந்த மூவர் கூட்டணி
ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி டெவன் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹமது, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
உலக கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏராளமான இந்திய நட்சத்திர வீரர்கள் மீண்டும் மெகா ஏலத்திற்கு வந்துள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் நிர்வாகம் ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என்று கூறிய நிலையில், மொத்தமுள்ள 10 அணிகளும் தங்களுக்கான சிறந்த வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டனர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.120 கோடி செலவழிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை [24-11-24] அன்று முதல் நாள் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. இரண்டாம் நாள் மற்றும் நிறைவு நாள் ஏலம் இன்று நடைபெறவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK):
சென்னை அணி இதுவரை, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மகேந்திரசிங் தோனி ஆகிய இந்திய வீரர்களையும், வெளிநாட்டு வீரரான மதீஷா பத்திரனாவையும் தக்கவைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இருந்த ரூ.120 கோடியில், இதுவரை ரூ.65 கோடிக்கு வீரர்களை தக்கவைத்த நிலையில், ரூ.55 கோடி மட்டுமே கைவசம் இருந்தது.
இந்நிலையில், ஏலம் தொடங்கிய வெகுநேரம் வரைக்கும் சென்னை அணி, எந்த வீரரையும் ஏலத்தில் எடுக்கவில்லை. பின்னர், இதற்காகத் தான் காத்திருந்தோம் என்பது போல டெவன் கான்வே பெயர் அறிவிக்கப்பட்டதும், அவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி கடுமையாக போட்டி போட்டது.
அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், முதல் வீரராக டெவன் கான்வே-யை 6.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. டெவன் கான்வே கடந்த 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு சீசன்களில் சென்னை அணிக்காக அதிரடி தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். கடந்த சீசனில் விளையாடாவிட்டாலும், இதுவரை சென்னை அணிக்காக 22 போட்டிகளில் 924 ரன்கள் [ஸ்ட்ரைக் ரேட் 141.28] எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவரை தொடர்ந்து, ராகுல் திரிபாதியை 3.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி. 2017ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் திரிபாதி, மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.50 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது. கடந்த சீசனில் ரச்சின் ரவீந்திரா சென்னை அணிக்கு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்க, சென்னை அணி நிர்வாகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. இறுதியாக, 9.75 கோடிக்கு அஸ்வினை வாங்கியது. ஏற்கனவே, சென்னை அணிக்காக விளையாடியுள்ள அஸ்வின் கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமதுவை 4.80 கோடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. யாரும் எதிர்பாராத வகையில், ஆஃப்கானிஸ்தான் வீரர் நூர் அஹமதுவை சென்னை அணி 10 கோடி கொடுத்து வாங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. நேற்றைய ஏலத்தில், சென்னை அணி நூர் அஹமதுவுக்கு அதிக செலவளித்தது குறிப்பிடத்தக்கது.
அவர்களுக்கு பின்னர் தமிழக வீரர் விஜய் சங்கர் 1.20 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது சென்னை அணி. விஜய் சங்கர் கடந்த 2 சீசன்களில் குஜராத் அணிக்காக விளையாடினார். குறிப்பாக 2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 301 ரன்கள் எடுத்தது முக்கியமாக அம்சமாகும்.
சென்னை அணியில், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா ஆகிய மூவரும் விளையாட உள்ளனர். இதனால், மூவரையும் குறிப்பிட்டு ஆர்.ஆர்.ஆர். மீண்டும் களத்திற்கு திரும்பப் போவதாக சென்னை அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
What's Your Reaction?