சிதம்பரம் கோயில் ஏன் தனிச்சிறப்பு பெற்றது? நடராஜரின் திருத்தல மகிமை!

சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆன்மீக சிறப்புகள், திருச்சிற்றம்பலத்தின் ரகசியங்கள் மற்றும் தில்லை நடராஜரின் மகிமைகளை விளக்கும் பதிவு.

Sep 28, 2026 - 08:00
சிதம்பரம் கோயில் ஏன் தனிச்சிறப்பு பெற்றது? நடராஜரின் திருத்தல மகிமை!

ஆலய உலா..! - வி.ராம்ஜி

எத்தனையோ பெருமைகளைக் கொண்ட தலங்களைக் கொண்டது என சிதம்பரம் கோயிலைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.  வேறு எந்தக் கோயிலுக்கும் இல்லாத பெருமையும் அதிசயமும் சிதம்பரத்துக்கு உண்டு. இதற்குக் காரணம் என்ன தெரியுமா? எல்லா சிவாலயங்களிலும் அர்த்தசாம பூஜை முடிந்து, இரவு 8 மணிக்கு, 8.30 மணிக்கு என நடைசார்த்திவிடுவார்கள்.

ஆனால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டும் இரவு 10 மணிக்குத்தான் அர்த்தசாம பூஜை ஆரம்பமாகும். அதையடுத்தே நடை சார்த்தப்படும். ஏன் தெரியுமா? உலகில் உள்ள எல்லா ஆலயங்களின் இறைவனும் தில்லை என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜனின் திருநடனத்தை தரிசிப்பதற்காக, சிவ ஆட்டத்தைக் கண்டு களிப்பதற்காக, தினமும்  சிதம்பரத்துக்கு வருகிறார்கள் என்று புராணங்கள் போற்றுகின்றன.

சிதம்பரம் திருத்தலம் நினைக்க நினைக்க வியப்பூட்டக்கூடியவையாகவும் பிரமிப்பை விஸ்தரித்தபடியேயும் இருக்கிறது. திருச்சிற்றம்பலத்தின் தங்க விமானத்தில் 9 கலசங்களுடன் கிழக்கு மேற்காக நீள் சதுர வடிவிலானது. தெற்குப்பகுதி தவிர மற்றப் பகுதிகள் சந்தனப் பலகைகளால் மூடப்பட்டிருக்கின்றன. நடராஜப் பெருமான் வீற்றிருக்கும் மேடை, தரை மட்டத்திலிருந்து சுமார் 5 அல்லது 6 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

திருச்சிற்றம்பலத்தின் முன்புறம் கனகசபை அமைந்துள்ளது. பக்தர்கள், இங்கிருந்துதான் நடராஜப் பெருமானை வணங்குகின்றனர். கனகசபையில் ஒன்பது வாசல்கள் உள்ளன. இவை நமது உடலில் உள்ள ஒன்பது வாசல்களைக் குறிக்கும். கனக சபை பிரம்மபீடப் பகுதி எனப்படுகிறது. இந்த கனக சபையில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களைக் குறிக்கின்றன என்கிறார் சிதம்பரம் கோயிலின் வெங்கடேச தீட்சிதர்.

கனக சபையில் அன்னப் பாவாடை பரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐந்து பெரிய தளவரிசைக் கற்கள் பஞ்ச பூதங்களைக் குறிப்பிடுகின்றன. கனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலத்திற்கு ஏறும் ஐந்து வெள்ளிப் படிகள்... நமசிவாயம் எனும் பஞ்சாட்சரப் படிகள்  ஐந்தெழுத்து மந்திரங்களை பறைசாற்றுகின்றன. இந்தப் படிகளின் இருபக்கங்களிலும் யானை உருவம் இருப்பதால் இதனை திருக்களிற்றுப்படி எனச் சொல்கிறது கல்வெட்டு! களிறு என்றால் யானை என்று அர்த்தம்!

கனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலம் எனப்படும் சித்சபைக்கு செல்லும் நுழைவாயிலில் பஞ்சாட்சரப் படிகளுக்கு மேலே அமைந்த கதவினை அவித்யை என்று விவரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பக்கமும் தண்டி , முண்டி எனும் துவாரபாலகர்கள் உள்ளனர். இந்த வாசல்தான் இதயவாசல்! திருச்சிற்றம்பலத்தில் ஐந்து தெய்வீகப் பீடங்கள் உள்ளன. பஞ்சாட்சரப் படி ஏறி கால் வைக்கும் இடம் பிரம்ம பீடம் எனப் போற்றப்படுகிறது.

அடுத்து திருச்சிற்றம்பலத்தினுள் சுமார் ஓரடி அகலமுள்ள இடத்தில் ஐந்து தங்கத் தூண்கள் உள்ளன. இது விஷ்ணுபீடம் எனப்படுகிறது. சிவாலயத்தில் விஷ்ணு பீடமா? ஆமாம், அந்தக் காலத்தில் சிவ விஷ்ணு பேதங்களில்லை. வழிபாட்டில் கோடுகிழித்து பார்க்கப்படவில்லை. இங்கேயுள்ள . ஐந்து தூண்களும் பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன!

நடராஜப் பெருமான் முன்பு தீட்சிதர்கள் நின்று பூஜை செய்யும் இடம் ருத்ரபீடம் என்றும் நடராஜ மூர்த்தியும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் பீடம் மகேஸ்வர பீடம் என்றும் சொல்லப்படுகிறது. இது சுமார் 6 அல்லது 7 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்டு தங்கத்தால் மூடப்பட்டிருக்கும்.

மகேஸ்வர பீடத்துக்கு இரண்டுபடிகள் உண்டு. மேற்குப்படியில் சந்திரமௌலீஸ்வரர் ஆகிய ஸ்படிக லிங்கமூர்த்தியும், ரத்தின சபாபதி ஆகிய ரத்தினத்தினாலான நடராஜ மூர்த்தியும் தனித் தனிப் பெட்டிகளில் எழுந்தருளியுள்ளனர். மகேஸ்வர பீடத்தில் ரத்தினம் இழைத்த இறைவனின் திருவடிகள் சிவ பாதுகை எனும் தங்கத் தட்டில் இறைவனுக்கு வலப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் நடராஜ மூர்த்தியின் வலப்புறத்தில் ஸ்ரீமுகலிங்கம் உள்ளது. நடராஜமூர்த்தியும் சிவகாமி அன்னையும் வீற்றிருக்கும் மகேஸ்வர பீடத்தில் பத்து தூண்கள் உள்ளன. அதில் உள்ள 4 தூண்கள் நான்கு வேதங்கள்; ஆறு தூண்கள் ஆறு சாஸ்திரங்கள்!

இத்தனை பெருமைகள் கொண்ட சிதம்பரம் பிரமாண்டமான திருத்தலம். உலகில் உள்ள எல்லா ஆலயங்களின் இறைவனும் தில்லை அம்பல நடராஜனின் திருநடனத்தை தரிசிக்க சிதம்பரத்துக்கு வருகிறார்கள் என்கிற புராண - புராதனப் பெருமைகள் கொண்ட புண்ணிய க்ஷேத்திரம் என்கிறார் வெங்கடேச தீட்சிதர்.
இன்னொரு விஷயம்... வைஷ்ணவத்தில் கோயில் என்று சொன்னாலே அது ஸ்ரீரங்கம்தான். அதேபோல் சைவத்தில் கோயில் என்றாலே அது சிதம்பரம்தான்!
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow