சிவபெருமானுக்கு அமுது படைத்த காரைக்கால் அம்மையார்..ஜோதி வடிவில் சிவனிடம் ஐக்கியமானார்.. பக்தர்கள் பரவசம்
மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்காலில் நேற்றிரவு அமுது படையல் நடைபெற்றது. சிவனிடம் ஜோதி வடிவத்தில் இன்று ஐக்கியமானார் காரைக்கால் அம்மையார்.
காரைக்கால்: 63 நாயான்மார்களில் சிவபெருமானின் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா நேற்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. முக்கனிகளுள் ஒன்றான மாங்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா நடைபெறுவது உலகிலேயே காரைக்காலில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இறைவன் மீது இறைக்கப்படும் மாங்கனியை குழந்தைபேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாம்பழங்கள் இறைத்து வேண்டுதலை நிறைவேற்றினார். தொடர்ந்து பிச்சாண்டவருக்கு காரைக்கால் அம்மையார் இல்லத்தில் உணவு அளிக்கும் நிகழ்வான அமுதுபடையல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனையும் நடைபெற்றது. அமுது படையல் நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர்.
இன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு அம்மையார் இறைவனோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோயில் மற்றும் கோயிலில் உள்ள வீதிகளில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, அம்மையார் ஜோதி வடிவமாக இறைவனோடு ஐக்கியமானதை விளக்கும் வகையில் காரைக்கால் அம்மையார், பேயுருவில் கைலாயம் சென்ற வைபவம் நடைபெற்றது.
அப்போது சிவபெருமான் கோயிலுக்கு வெளியில் ஓரிடத்தில் இருந்தார். அப்போது இரட்டை மணிமாலை, திருவந்தாதி பாடப்பட்டது. பின்னர் ஊரிலுள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, சிவனுக்கு அருகில் ஒரு தீப்பந்தமும், காரைக்காலம்மையார் கோயிலில் ஒரு தீப்பந்தமும் ஏற்றப்பட்டது. அம்மையார் கோயில் தீப்பந்தத்தை, சிவனருகே உள்ள தீப்பந்தத்தில் கொண்டு சென்று சேர்த்தனர். அம்மையார், ஜோதி வடிவில் இறைவனை ஐக்கியமாவதாக இதனை சொல்கிறார்கள்.
பேய் பயம் கொண்டவர்கள் இந்த நிகழ்ச்சியை தரிசனம் செய்தால் பேய் பயம் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.
What's Your Reaction?