தங்க ரத்தில் உலா வந்த திருப்பதி மலையப்பசுவாமி.. ஏழுமலையானை தரிசிக்க ஜூலை மாத டிக்கெட் ஆன்லைனில் ரிலீஸ்

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தங்க தேரில் திருமாட வீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்ல வலம் வந்து அருள் பாலித்தார்.

Apr 22, 2024 - 12:53
தங்க ரத்தில் உலா வந்த திருப்பதி மலையப்பசுவாமி.. ஏழுமலையானை தரிசிக்க  ஜூலை மாத  டிக்கெட் ஆன்லைனில் ரிலீஸ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். திருப்பதி சென்று வந்தாலே திருப்பம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

புரட்டாசி மாத பிரம்மோற்சவம், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி, தெப்ப உற்சவ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு சென்று ஏழுமலையானை வழிபடுவார்கள். இப்போது திருமலையில் வசந்த உற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று தங்க ரதத்தில் மலையப்பசுவாமி மாட வீதிகளில் உலா வந்தார். 

மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமோதராக தங்க தேரில் வலம் வந்ததை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  கோவிந்தா.. கோவிந்தா.. என முழக்கமிட்டு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். 

மலையப்பசுவாமியை  தங்க தேரில்  தரிசிப்பதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் செல்வம், இன்பம், ஆசீர்வாதம், அனைத்து தானியங்கள் மற்றும் ஏழுமலையானின் அருள் கிடைக்கும்  என்று பக்தர்கள் நம்பிக்கை.

இந்நிகழ்ச்சியில் இ.ஓ. ஏ.வி.தர்மரெட்டி தம்பதி, கோயில் துணை இ.ஓ. லோகநாதம், விஜிஓ நந்த கிஷோர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இன்று மதியம்  கோயிலுக்கு பின்புறம் உள்ள வசந்த மண்டபத்தில் பிற்பகலில் பால்,தயிர், இளநீர், மஞ்சள், உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

இதனிடையே திருப்பதி திருமலை வெங்கடேஸ்வரா கோயிலில் ஜூலை மாதத்திற்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிடம் மற்றும் ஸ்ரீவாரி விருப்ப சேவைகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்டவற்றுக்கான டிக்கெட்களை இன்று ( ஏப்ரல் 22) பெற்றுக்கொள்ளலாம். அங்கப்பிரதட்சனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்களை நாளை ( ஏப்ரல் 23) ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.

மூத்த குடிமகன்கள், மாற்று திறனாளி பக்தர்கள் 23ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அதற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏப்ரல் மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். வரும் 24-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow