அண்ணாமலை கொடுத்த 100 வாக்குறுதிகள்... 500 நாட்களில் கோவையில் செய்யப்போகும் சம்பவம்.. எகிறும் எதிர்பார்ப்பு
இலவசமாக உணவு வழங்கும் வகையில் காமராஜர் பெயரில் 3 FOOD BANK அமைக்கப்படும்.
கோவை மக்களவைத் தொகுதியில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாடு பாஜக தனது தலைமையில் பெரும் கூட்டணி அமைத்து களமிறங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கும் நிலையில், தமிழ்நாடு பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கோவை தொகுதிக்கான வாக்குறுதி பட்டியலை இன்று ( ஏப்ரல் 12) வெளியிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கோவை மக்களவைத் தொகுதிக்கு 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி,
- கோவை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு மக்கள் குறைதீர்ப்பு மையமாக செயல்படும்.
- கோவை விமான நிலையம் சர்வதேச முனையமாக தரம் உயர்த்தப்படும்.
- கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும்.
- ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்.
- நொய்யல், கெளசிகா நதிகளை மீட்டெடுத்து கோவையின் நீர்வளத்தை மேம்படுத்துவோம்.
- தேசிய புலனாய்வு முகமையின் கிளை அலுவலகம் (NIA) மற்றும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் (NCB) மையம் கோவையில் நிறுவப்படும்.
- மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் வகையில் கோவையில் 4 நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும்.
- விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கும் வகையில் தேசிய விளையாட்டு ஆணையம் பட்டியாலாவின் கிளை பயிற்சி மையம் அமைக்க வலியுறுத்தப்படும்.
- கோவையில் 250 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்படும்.
- முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய உலகத் தரம் வாய்ந்த தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- கொங்கு மண்டலத்தில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்து ஆயுஸ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- கோவையில் இருந்து நாடு முழுவதும் ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.
- கோவையில் செமி கண்டக்டர் தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும்.
- எந்த நேரமும் யார் வேண்டுமானாலும் இலவசமாக உணவருந்தும் வகையில் காமராஜர் பெயரில் கோவையில் மூன்று FOOD BANK அமைக்கப்படும்.
- கடந்த 10 ஆண்டுகளில் கோவை மக்களவைத் தொகுதி நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை சிறப்பு தணிக்கைக்கு உட்படுத்தி முறைகேடு கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
- விசைத்தறி உரிமையாளர்களின் பயன்பெறும் வகையில் பவர் டெக்ஸ் திட்டத்தின் கீழ் சூரிய மின் தகடுகள் அமைக்கவும், சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத விசைத்தறிகளாக மாற்ற வழங்கப்படும் மானியம் உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து கோவை தொகுதிக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி குறித்து பேசிய அண்ணாமலை, "5 ஆண்டுகள் முடியும் போது சர்வதேச வரைபடத்தில் கோவை இருக்கும். இன்று உள்ள பிரச்னைகள் மற்றும் நாளை வரக்கூடிய பிரச்னைகளுக்கான தீர்வு இந்த தேர்தல் வாக்குறுதியில் உள்ளது. 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் என்ற இலக்கை போர்க்கால அடிப்படையில் செய்வோம்" எனக் கூறினார்.
What's Your Reaction?