FAIR Delimitation.. அந்தர் பல்டி அடித்தாரா Vijay? உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டுவர DMK திட்டம்?

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அந்தர் பல்டி அடித்துள்ளதாக எழும் விமர்சனங்களுக்கு மத்தியில், அவர்மீது சட்டமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டுவர திமுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Aug 20, 2026 - 17:00
FAIR Delimitation.. அந்தர் பல்டி அடித்தாரா Vijay? உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டுவர DMK திட்டம்?

கடந்த வாரம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை நிரந்தரமாகத் தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ள கருத்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கோவளத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய், மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்தார்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல், மனிதவள மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் தென் மாநிலங்கள் முன்னிலையில் இருப்பதால், அதற்காக அவற்றின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்றும் அவர் கூறினார். மேலும், எந்த மாநிலத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ சதவீதமும் குறையாது என்பதை ஒன்றிய அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுதான் தற்போது அரசியல் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. ஏனெனில், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திலும், ஆகஸ்ட் 12-ம் தேதி சட்டப்பேரவையிலும், தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என்றும், தொகுதி மறுவரையறையை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

குறிப்பாக, மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-ஆகவே நிரந்தரமாக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் தொடர வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், தற்போது “மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது” என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே அவர் முன்வைத்திருப்பது, 543-ஐ தாண்டி மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மறைமுகமாக ஒப்புதல் அளிக்கும் நிலைப்பாடா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதனால், “தொகுதி மறுவரையறையே கூடாது” என்ற நிலைப்பாட்டில் இருந்து விஜய் பின்வாங்கிவிட்டாரா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மாறாக முதலமைச்சரின் தற்போதைய கருத்து உள்ளதா என்றும் அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படுமா? என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. அவையின் தீர்மானம் மற்றும் முதலமைச்சரின் தற்போதைய நிலைப்பாடு குறித்து ஆளுங்கட்சிக்கு எதிராக அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தை முன்வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிடுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனினும், விஜய்யின் தற்போதைய பேச்சு 543 இடங்களை அதிகரிப்பதற்கு நேரடி ஆதரவு என அவர் வெளிப்படையாக கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது வலியுறுத்தல், தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவ விகிதம் குறையாமல் இருப்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தைப் பெறுவது என்பதாகவே உள்ளது.

இந்நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் விஜய்யின் நிலைப்பாடு உண்மையில் மாறியதா அல்லது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் புதிய அணுகுமுறையா? என்பதுதான் தற்போது அரசியல் களத்தில் விவாதமாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow