6 தேசிய கட்சிகளின் நன்கொடை விவரம்: பாஜகவில் கொட்டும் பணமழை!
6 தேசிய கட்சிகள் கடந்த நிதியாண்டில் (2023-2024) சுமார் ரூ.2544.278 கோடியினை நன்கொடையாக பெற்றுள்ளார்கள். இதுக்குறித்த தெளிவான பகுப்பாய்வினை மேற்கொண்டுள்ளது ADR.

இந்தியாவிலுள்ள 6 தேசிய அரசியல் கட்சிகள் (2023-24) நிதியாண்டில் பெற்ற நன்கொடை விவரங்களை செப்டம்பர் 30,2024 அன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை பகுப்பாய்வு செய்து ஆய்வு அறிக்கையொன்றினை ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு (Association for Democractic Reforms -ADR) வெளியிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் ரூ.20,000-க்கு அதிகமாக பெறும் நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தியாவிலுள்ள 6 தேசிய கட்சிகள் கடந்த நிதியாண்டில் (2023-2024) சுமார் ரூ.2544.278 கோடியினை நன்கொடையாக பெற்றுள்ளார்கள். அதற்கு முந்தைய நிதியாண்டில் (2022-2023) தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையானது ரூ.850.43 கோடி மட்டுமே. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அளவில் கடந்த நிதியாண்டு நன்கொடை சுமார் 199.17 சதவீதம் அதிகரித்துள்ளது.
6 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம்:
மொத்த நன்கொடையான ரூ.2544.278 கோடியில், பாஜக மட்டும் ரூ.2,243.947 கோடியினை நன்கொடையாக 8358 நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 211.72% அதிகம். 2022-23 நிதியாண்டில் பாஜக பெற்ற மொத்த நன்கொடை ரூ719.85 கோடியாகும்.
பாஜகவிற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி சுமார் ரூ.281.48 கோடியினை நன்கொடையாக 1994 நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 252 % அதிகம். 2022-23 நிதியாண்டில் காங்கிரஸ் பெற்ற மொத்த நன்கொடை ரூ79.92 கோடி மட்டுமே.
பாஜக, காங்கிரஸ் தவிர்த்து ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி (National People's Party), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியன தேசிய கட்சிகளாக இந்திய தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் பகுஜன் சமாஜ் கட்சி கடந்த நிதியாண்டில் 20,000-ரூபாய்க்கு அதிகமாக எவ்வித நன்கொடையும் பெறவில்லை என தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி ரூ.11 கோடி, மார்க்சிஸ்ட் ரூ.7.6 கோடி, தேசிய மக்கள் கட்சி ரூ.0.14 கோடியினை கடந்த நிதியாண்டில் நன்கொடையாக பெற்றுள்ளன.
எந்த மாநிலத்திலிருந்து அதிக நன்கொடை?
தேசிய கட்சிகள் தாக்கல் செய்த நன்கொடை அளித்தவர்கள் விவரங்களை, அவர்களது முகவரியின் அடிப்படையில் எந்த மாநிலத்தவர் அதிகம் நன்கொடை செய்துள்ளார்கள் என ADR வகைப்படுத்தியுள்ளது.
அதன்படி, டெல்லி மாநிலத்தை சேர்ந்த நன்கொடையாளர்களிடமிருந்து மட்டும் சுமார் 989 கோடி ரூபாயினை தேசிய கட்சிகள் நன்கொடையாக பெற்றுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக குஜராத் (ரூ.404.512 கோடி), மஹாராஷ்டிரா (ரூ. 334.079 கோடி), தமிழ்நாடு (ரூ.142.7 கோடி), தெலங்கானா (ரூ.112.9 கோடி) மாநிலத்தவர்கள் உள்ளனர்.
மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து ரூ.554.7 கோடியளவில் நன்கொடை பெறப்பட்டுள்ளது. சுமார் ரூ.6.062 கோடியானது எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தை சார்ந்தவர்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்டது என்பதில் தெளிவில்லாமல் உள்ளது.
தேசிய கட்சியாக இருப்பினும், கடந்த நிதியாண்டில் ரூ.20,000-க்கு மேல் எந்த நன்கொடையும் பெறவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் அரசியல் களத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், 2024-ஆம் நடைப்பெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. அதேப்போல் 2022- ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெறும் ஒரு இடத்தை மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
தேசிய கட்சிகள் பெற்றுள்ள மொத்த நன்கொடையான ரூ.2544.278 கோடியில், கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடை பங்களிப்பு மட்டும் ரூ.2262.55 கோடி , தனிநபர்களின் பங்களிப்பு ரூ.270.872 கோடி, யூனியன் போன்ற அமைப்புகளின் பங்களிப்பு ரூ.1.681 கோடியாகும் என ADR தனது பகுப்பாய்வில் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?






