தேவர் ஜெயந்தியில் தவெக வாகனங்கள் பறிமுதல் - போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

16 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Oct 30, 2024 - 14:14
தேவர் ஜெயந்தியில் தவெக வாகனங்கள் பறிமுதல் - போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தவெக சார்பில் மரியாதை செய்ய இருசக்கரத்தில் வந்த நிர்வாகிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை முன்னிட்டு இன்று அவருக்கு மாலை மரியாதை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை மரியாதை செய்வதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் வருகை தந்த வண்ணமே உள்ளனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தவெக நிர்வாகி விஜய் கல்லணை அன்பன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் வருகை தந்து தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் திருவருவுச்சிலைக்கு மாலை மரியாதை செய்ய வந்துள்ளனர். இந்த நிலையில் தங்களது தோள்களில் தவெக கட்சி துண்டை போட்டவாறு ஊர்வலமாக வந்ததாக காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வருவதற்கு அனுமதி இல்லை என காவல்துறை சார்பில் தெரிவித்த நிலையில், வாகனங்களை சிலைக்கு அருகாமையில் நிறுத்திவிட்டு கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை மரியாதை செய்வதற்காக காரின் மூலம் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் சிலை அருகே நிறுத்தி வைக்கப்பட்ட 20 மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

மேலும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறியதால் தமிழக வெற்றி கழகத்தினுடைய நிர்வாகிகளுக்கும், காவல்துறை தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 16 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தின் அபராதத்தை நீதிமன்றத்தில் கட்டி வாகனத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என தெப்பக்குளம் சரக உதவி ஆணையர் சூரக்குமார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow