தனுஷ் அரசியல் என்ட்ரி.... அன்றே அடித்தளம் போட்டாரா?

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதாக கூறப்படும் நிலையில், அவர் தனது அரசியல் வருகைக்காக சினிமாவிலேயே அடித்தளத்தை அமைத்துவிட்டார் என்று ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். 

Jul 28, 2026 - 18:30
தனுஷ் அரசியல் என்ட்ரி.... அன்றே அடித்தளம் போட்டாரா?

திருவள்ளூரில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிகழ்வில் நடிகர் தனுஷ் பேசிய உரை, புதிய ரசிகர் மன்றக் கொடி, அதற்கு அவர் தரப்பில் மறுப்பு எதுவும் வராதது என அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், "தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?" என்ற கேள்வியை தமிழ்நாடு முழுவதும் பேசப்படும் விவாதமாக மாற்றியுள்ளன. இதுவரை தனுஷ் அரசியல் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மிகக் குறுகிய காலத்தில் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக மாறியுள்ள சூழலில், தனுஷின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த அரசியல் யூகங்களுக்கு அப்பாற்பட்டு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக தனுஷ் தேர்வு செய்த திரைப்படக் கதாபாத்திரங்கள் அனைத்தும் தமிழக அரசியலின் முக்கிய விவாதங்களான சாதி, நில உரிமை, காவல்துறை அத்துமீறல், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பிரச்னைகளை மையமாகக் கொண்டவையாகவே இருந்து வருகின்றன.

அதாவது தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவரது அரசியல் முகம் புதிதாக இருக்காது என்று பலரும் கருதுகின்றனர். காரணம், அவரது திரைப்படங்களே அதற்கான அடித்தளத்தை பல ஆண்டுகளாக அமைத்து வந்துள்ளன என்று கூறப்படுகிறது. ம்

நில உரிமை, சாதி ஒடுக்குமுறை – அசுரன்!

வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' திரைப்படம் தனுஷின் அரசியல் சார்ந்த படங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சாதி ஆதிக்கத்தால் ஒடுக்கப்படும் விவசாயியான சிவசாமி, தனது மூன்று ஏக்கர் நிலத்தை காப்பாற்ற போராடுகிறார். நில அபகரிப்பு, சாதி வன்முறை, சமூக ஒடுக்குமுறை ஆகியவை திரைப்படத்தின் மையமாக அமைந்துள்ளன. இங்கு தனுஷ் ஒரு சாதாரண கதாநாயகனாக அல்ல; ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக உருவாக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை வன்முறை, சாதி அரசியல் – கர்ணன்!

மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்', தனுஷின் அரசியல் சாயல் மிகத் தெளிவாக வெளிப்பட்ட திரைப்படமாக பார்க்கப்படுகிறது. பேருந்து நிறுத்தம் கூட இல்லாத ஒடுக்கப்பட்ட கிராமம், அரசின் அலட்சியம், காவல்துறையின் அடக்குமுறை ஆகியவற்றை படம் நேரடியாக பேசுகிறது. 1995-ஆம் ஆண்டு கொடியங்குளம் சம்பவத்தை நினைவூட்டும் காவல்துறை தாக்குதல் காட்சிகள் மூலம், அரசின் அதிகார இயந்திரத்திற்கு எதிராக மக்களின் உரிமையை வலியுறுத்தும் கதாபாத்திரமாக தனுஷ்கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருந்த்து. 

பிரிட்டிஷ் ஆட்சி, நிலம், சாதி - கேப்டன் மில்லர்!

'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில், சாதி காரணமாக கோவிலுக்குள் நுழைய முடியாத இளைஞன், மரியாதைக்காக பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் சேர்கிறான். பின்னர், தனது சொந்த மக்களின் நிலத்தைப் பாதுகாக்கவே ஆட்சிக்கு எதிராக போராடும் மனிதனாக மாறுகிறான். இந்த திரைப்படமும் நில உரிமை, சமூக சமத்துவம் போன்ற அரசியல் அம்சங்களை மையமாகக் கொண்டுள்ளது.

அரசியல்-ரவுடிகள்-காவல்துறை கூட்டணி – வடசென்னை!

'வடசென்னை' திரைப்படத்தில், வடசென்னையின் குடிசைப் பகுதிகளை காலி செய்ய அரசியல் தலைவர்கள், ரவுடிகள், காவல்துறை, ஒப்பந்ததாரர்கள் இணைந்து செயல்படும் அதிகார வலையமைப்பை படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கேரம் விளையாட்டு வீரரான அன்பு, அரசியல் மற்றும் அதிகாரத்தின் உண்மையான முகத்தை அறியும் கதையாக படம் நகர்கிறது.

நேரடி அரசியல் - கொடி..!

'கொடி' திரைப்படத்தில், தேர்தல் அரசியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன், அரசியல் பொறுப்பு ஆகியவை முக்கிய கருவாக அமைந்துள்ளன. ஒரு அரசியல் வாரிசு மற்றும் அரசியலில் விருப்பமில்லாத பேராசிரியர் என இரட்டை வேடத்தில் நடித்த தனுஷ், மக்கள் அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

கல்வி அரசியல் - வாத்தி!

'வாத்தி' திரைப்படம் அரசு பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், கல்வி வணிகமயமாக்கல் போன்ற பிரச்னைகளை பேசுகிறது. அரசுப் பள்ளியை மீண்டும் உயிர்ப்பிக்க போராடும் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். கல்வி சமத்துவம் என்பது திரைப்படத்தின் முக்கிய அரசியல் கருத்தாக அமைந்துள்ளது.

வேலைவாய்ப்பு பிரச்னை - வேலையில்லா பட்டதாரி!

'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்னையை மையமாகக் கொண்டது. பொறியியல் பட்டம் பெற்றும் வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞனின் மனநிலையை தனுஷ் மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார். இன்றும் அந்த திரைப்படத்தின் கருத்து பொருத்தமானதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடித்த முக்கியமான பல திரைப்படங்களை ஒன்றாகப் பார்த்தால், அவை அனைத்தும் தமிழக அரசியலில் தொடர்ந்து பேசப்படும் முக்கிய பிரச்னைகளைச் சுற்றியே அமைந்துள்ளன.
•    சாதி ஒடுக்குமுறை 
•    நில உரிமை 
•    காவல்துறை வன்முறை 
•    கல்வி சமத்துவம் 
•    வேலைவாய்ப்பு 
•    சுற்றுச்சூழல் 
•    அரசியல் பொறுப்புணர்வு 
என மக்கள் சார்ந்த பிரச்னைகளில் போராடும் கதாநாயகனாகவே தனுஷ் தொடர்ந்து திரையில் தோன்றியுள்ளார்.

தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா,ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களின் அரசியல் பிம்பத்தை உருவாக்குவதில் சினிமா முக்கிய பங்கு வகித்தது போலவே, தனுஷின் திரைப்படங்களும் அவருக்கென ஒரு அரசியல் அடையாளத்தை ரசிகர்களின் மனதில் உருவாக்கியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தனுஷ் உண்மையில் அரசியலுக்கு வருவாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அவர் தேர்வு செய்த திரைப்படங்களும், அண்மைக்கால நடவடிக்கைகளும், அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. அதனால் தான், தற்போது அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் கண்ணோட்டத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow