பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு - இயக்குனர் மோகன் ஜி கைது
திருப்பதி லட்டைப் போலவே பழநி பஞ்சாமிர்தத்திலும் கலப்பட இருக்கிறது என்று ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டை முன் வைதத்தற்காக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருப்பதி வெங்கடாஜலபதி கேவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப்பிரசித்தி பெற்றது. திருப்பதி என்றாலே லட்டு... லட்டு என்றாலே திருப்பதி என்று சொல்லுமளவு லட்டுக்கு அடையாளமாகவே திருப்பதி இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் வாங்கிச் செல்லும் ஏழுமலையானின் பிரசாதம் லட்டு. உலகப் பிரசித்தி பெற்ற இந்த லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வரான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இது இந்திய அரசியல் கலத்தில் மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. உலகெங்கும் வாழும் இந்துக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். லட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கலப்படம் குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருப்பதி லட்டில் எப்படி மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதோ அதே போல, பழனி திருக்கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களிலும், கலப்படங்கள் இருக்கின்றன என திரைப்பட இயக்குநர் மோகன். ஜி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர். பழனி பழநி பஞ்சாமிர்தம் குறித்து முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை. ஆகவே, பழநி கோவில் நிர்வாகத்தின் மீது மோகன் ஜி எந்த ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் என்று கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பழநி காவல்நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இப்புகாரையடுத்து சென்னை ராயபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்த இயக்குனர் மோகன் ஜியை இன்று காலையில் திருச்சி மாவட்ட சைபர்கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் கைதானதைத் தொடர்ந்து அவர் திருச்சிக்கு அழைத்து செல்லப்படுவார் என்றும், அங்கு அவரிடம் மேற்படி விசாரணை நடைபெறும் எனவும் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார். மோகன் ஜி கைது செய்யப்பட்டதற்கு கருத்துத் தெரிவக்கக் கூட இங்கு உரிமையில்லையா என்று ஒரு தரப்பும், சர்ச்சையான கருத்துகளுக்கு பெயர் போன மோகன் ஜி கைதாகி இருப்பதில் பெரிய அளவில் அதிர்ச்சியாகத் தேவையில்லை, ஆதாரமில்லாமல் கருத்துத் தெரிவிப்பது தவறு என்று இன்னொரு தரப்பும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
What's Your Reaction?