ஜோசியத்தை நம்பினாரா கலைஞர்? ராமதாஸ் உடனான ட்வீட் மோதல் மீண்டும் வைரல்!

அமைச்சரின் கருத்தை தொடர்ந்து கலைஞரின் மஞ்சள் துண்டு விவாதம் பேசுபொருளாகியுள்ள நிலையில், கலைஞரின் ஜோதிட நம்பிக்கைக் குறித்து அவரும் ராமதாசும் மோதிக் கொண்ட ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Aug 21, 2026 - 13:00
ஜோசியத்தை நம்பினாரா கலைஞர்? ராமதாஸ் உடனான ட்வீட் மோதல் மீண்டும் வைரல்!

சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை மறைமுகமாக சுட்டிக்காட்டி, “ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு ஏற்கனவே பார்த்துவிட்டது” என்று பேசியிருந்தார். அமைச்சரின் இந்தக் கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில், கலைஞர் கருணாநிதி அணிந்திருந்த மஞ்சள் துண்டு, கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றின் பின்னணியில் ஜோதிடம் இருப்பதாக அப்போது வெளியான தகவல்களும், அதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கலைஞர் இடையே நடைபெற்ற ட்விட்டர் கருத்து மோதலும் மீண்டும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

கலைஞர் கருணாநிதி நீண்ட காலமாக மஞ்சள் நிற துண்டை அணிந்து வந்தார். இதற்கு குரு பகவானுக்கு உகந்த நிறம் என்பதால் ஜோதிட ஆலோசனையின் அடிப்படையில் மஞ்சள் துண்டை அணிவதாக அப்போது தகவல்கள் வெளியாகின. இதனை சுற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், கலைஞர் தனது வழக்கமான கேள்வி–பதில் பாணியில் அதற்கு விளக்கம் அளித்திருந்தார்.

அதேபோல், கலைஞர் சிவப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம் அணிந்தது குறித்தும் அப்போது பல்வேறு செய்திகள் பரவின. அவரது ஜாதகத்துடன் தொடர்புபடுத்தி, சிவப்பு நிறம் கொண்ட கடிகாரத்தை அணிவதாகவும், அதற்கு குறிப்பிட்ட ஜோதிட காரணங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.

கைக்கடிகாரம் மாற்றத்தை மையமாக வைத்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞரை விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தார். குறிப்பாக, ஜோதிடம் மற்றும் பரிகாரங்கள் தொடர்பான தகவல்களை முன்வைத்து, கலைஞரை கிண்டல் செய்யும் வகையில் அவர் தெரிவித்த கருத்து அப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

https://x.com/drramadoss/status/675932442004348929?s=20

இதற்கு பதிலளித்த கலைஞர், என் கையில் எந்தக் சிவப்பு கயிறும் கிடையாது.. ஓராண்டிற்கு மேலாக அணிந்திருக்கும் அதே கடிகாரம் என்று விளக்கம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே ட்விட்டரில் கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.

https://x.com/kalaignar89/status/676355382474702848?s=20

கலைஞரின் மஞ்சள் துண்டு விவகாரம் மட்டுமின்றி, அவர் அணிந்திருந்த பவள மோதிரம், சிவப்பு பட்டை கொண்ட கைக்கடிகாரம் உள்ளிட்டவையும் அவ்வப்போது ஜோதிடத்துடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டன. இதனால், கலைஞரின் உடை மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் தொடர்பான பழைய செய்திகள் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்த “ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டது” என்ற கருத்துடன், பல ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் மற்றும் ராமதாஸ் இடையே நடைபெற்ற அந்த ட்விட்டர் மோதலையும் நெட்டிசன்கள் தற்போது இணைத்து வருகின்றனர்.

இதனால், கலைஞரின் மஞ்சள் துண்டு விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow