விமர்சனம், டோரதி
சாதி, மதப் பாகுபாட்டை விட பாலின பாகுபாடு தான் மிக மோசமானது... இதுதான் படத்தின் கரு. பெண்கள் போற்றப்படும் இந்த சமூகத்தில் அவர்கள் எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை முதல் பாதியில் பார்ப்பவர்களின் மூளைக்குள் சுறுக்கென் தைக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
பின் பாதியில் பாலின பாகுபாட்டை கடந்த பேரன்பு மனிதர்களுக்குள் ஆழமாக இருந்தாலும் மனம் நினைப்பதை அறிவு எப்படி தடுத்துவிடுகிறது... முடிவில் மனம் எப்படி ஜெயிக்கிறது என்பதை கவிதையாக சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்...
‘டோரதி’யின் கதை இதுதான் என்று சில சம்பவங்களை கோர்த்து சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. இது கதையல்ல நிஜம், அதுவும் காலகாலமாக காணத் தவறிய நிஜம் என்பதால் சொல்லப்பட்டிருக்கும் விதத்தைப் பற்றி நிறைய சொல்லலாம்...
ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மடியில் முகம் புதைத்து அழ வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது? டோரதி அதை சொல்கிறாள்... திருமணத்திற்கு முன், பின் என பெண்கள் ஒரே பிறவியில் ஏன் இரண்டு ஜென்மம் எடுக்கிறாள்? டோரதி அதையும் சொல்கிறாள். ஒரு பெண் யாரை புணர்வது, யாரை நேசிப்பது என யார் முடிவு செய்வது? டோரதி இந்தக் கேள்வியையும் எழுப்புகிறாள்? சரி டோரதி யார்? கார்த்திக் சுப்புராஜாலும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை...
சனந்த், ரிஷி காந்த் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது நக்கல். கார்த்திக் சுப்புராஜ் நினைத்த கதாபாத்திரமாக மாறி இருக்கிறார்கள். ஆனால் அக் மார்க் மதுரைக்கார பசங்க என்று சொல்ல முடியவில்லை. கீர்த்தி சுரேஷ் வறட்சியான மனிதர்களுக்கு கிடைத்த புதையல், பொக்கிஷம். அற்புதங்களை ஏன் இந்த மக்களுக்கு ரசிக்கத் தெரியவில்லை, அனுபவிக்க தெரியவில்லை என்று நம்மை சிந்திக்க வைக்கிறார்... அவர் யார், என்ன? என்பதெல்லம் அர்த்தமற்றது...
படத்தில் வரும் திருநங்கைகள் கருப்பாக இருப்பது மனதை பாரமாக்குகிறது, ஈரமாக்குகிறது. விசில் வீரைய்யா முத்துக்குமார் காலத்தால் உறைந்துபோன மனிதர்களின் படிமம். சௌந்தர்ராஜா நெகிழி பை. ராமச்சந்திரன் இந்த சமூகம் மாறிக் கொண்டிருப்பதின் அடையாளம்.
இளையராஜா இசை அமைக்கவில்லை, இதயத்தை சீராக இயங்க வைத்து, மூளையை சரியான கோணத்தில் சிந்திக்க வைக்கிறார். உலகத்தின் இசையும், மதுரை பரோட்டாவின் சுவையும் அறிந்த ஒருவரால் மட்டுமே சனந்த் பரோட்டா சாப்பிடும் காட்சிக்கு இப்படி இசையமைக்க முடியும். திருவின் ஒளிப்பதிவு திரைக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது.
ரிஷிகாந்துக்கு தேள் கொட்டிய இடத்தில் திரைக்கதை தள்ளாடுகிறது. ஆண்களுக்கான நியாயங்கள், பெண்களுக்கான நியதிகளைக் கடந்த, எல்லைகளற்ற சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள். அவர்களின் சர்வைவல் அல்ல அவர்கள் வாழ்க்கை. இந்த புரிதல் கார்த்திக் சுப்புராஜுக்கும் இல்லாததால் இறுதிக் காட்சியில் அன்பு என்ற பெயரில் அவர்களின் சுதந்திரமான் வாழ்க்கையை வழக்கமான் மனித வரைமுறைக்குள் சுறுக்கி விட்டார்.
டோரதி - தேவதை
3.5 ஸ்டார்
(இளையரவி)