கெட்ட வார்த்தையில் அப்பா திட்டிடாரு.. தாஜ்மஹால் திரைப்படம் குறித்து மனோஜ் பாரதிராஜா
தமிழ் சினிமாவினை புரட்டிப் போட்ட இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் அன்பு மகன் மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகராக, இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதிக்க இறுதி வரை போராடி வந்தார் மனோஜ் பாரதிராஜா.

தனது மகனை பெருங்கனவோடு, தாஜ்மஹால் படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. ரஹ்மான் இசையில் வெளியான படத்தின் பாடல்கள் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. மாயன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த மனோஜ் பாரதிராஜாவிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பும் அளித்தனர்.
மாரடைப்பால் உயிரிழப்பு:
கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மனோஜ் பாரதிராஜா, 2023 ஆம் ஆண்டு மார்கழி திங்கள் என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். சினிமாவில் தனக்கான நிலையான இடத்தை பெற இறுதி வரை போராடிக் கொண்டிருந்தார் என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் சமீபத்தில் இருதய பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மனோஜ் பாரதிராஜா திரைத்துறையிலிருந்து கொஞ்சம் விலகி வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வகையில் நேற்றைய தினம் திடீர் மாரடைப்பால் மனோஜ் பாரதிராஜா உயிரிழந்தார்.
அவரின் மறைவினைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தனது திரைப்பயணங்களை குறித்து மனோஜ் பாரதிராஜா நேர்க்காணலில் பேசிய தொகுப்புகள் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், தன் முதல் படம் குறித்து அப்பா அடித்த கமெண்ட் என மனோஜ் பேசிய காணொளி அதிகமாக பகிரப்படுகிறது.
அந்த காணொளியில் அவர் பேசியவை: ”தாஜ்மஹால் படத்திற்காக ரஹ்மான் இசையமைத்த “திருப்பாச்சி அருவாள” பாடல் ஒலிப்பதிவு முடிந்த தருணம். ரெக்கார்டிங் முடிந்த கையோடு முதல் முறையாக அப்பாவுக்கு அந்த பாடலை போட்டு காண்பித்தேன். டக்குனு கெட்ட வார்த்தையில் திட்டிடாரு. (ரொம்ப பாச உணர்ச்சியில் தான்). அதாவது, ”பயங்கர அதிர்ஷ்டம்டா உனக்கு. ஓப்பனிங்க் சாங் இந்த மாதிரி, ரஹ்மான் மியூசிக், உங்க அப்பா டைரக்ஷன், போடா...” அப்படினு அப்பா சொன்னாரு.
“நான் பதிலுக்கு ” உங்களுக்கும் வரும்ங்க.. ஏன் இப்படி பீல் பண்றீங்கனு” கேட்டேன். அதுக்கு, ”நாங்க எல்லாம் இங்க வர கஷ்டப்பட்டோம் டா..உனக்கு தாம்பூழ தட்டுல வச்சு தாறாங்க-னு” சொன்னாரு. இதெல்லாம் ரொம்ப கிண்டலா தான் சொன்னாரு” என ஒரு நேர்க்காணலில் தனது நடிப்பில் வெளியான தாஜ்மஹால் குறித்த நினைவலைகளை மனோஜ் பாரதிராஜா பகிர்ந்துள்ளார்.
மனோஜ் பாரதிராஜவின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






