குடிபோதையில் பஸ் மெக்கானிக் செய்த சம்பவம்-10 நாட்களாக பணி வழங்காததால் ஆத்திரம்
காம்பவுண்ட் சுவர் மற்றும் அருகில் இருந்த வாகனங்கள் சேதமடைந்தன
சென்னையில் குடிபோதையில் பேருந்தை இயக்கி காவல் நிலைய காம்பவுண்டில் மோதிய மெக்கானிக்கால் பரபரப்பு ஏற்பட்டது.
அடையாறு காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள அடையாறு மாநகர போக்குவரத்து பணிமனையில் குணசேகரன்(50) என்பவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். ஒழுங்கீனம் காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இவருக்கு பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு முறை அடையாறு காவல் நிலையம் வந்த குணசேகரன் அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த காவலர்களிடம் தகராறு செய்ததாகவும் பின்னர், டெப்போவுக்குள் சென்று அங்கும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், அடையாறில் இருந்து மேற்கு தாம்பரம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து அதிவேகமாக இயக்கி, அடையாறு காவல் நிலைய காம்பவுண்ட் சுவரில் மோதியுள்ளார். இதில் காம்பவுண்ட் சுவர் மற்றும் அருகில் இருந்த வாகனங்கள் சேதமடைந்தன.அளவுக்கு அதிகமான போதையில் இருப்பதால் குணசேகரனிடம் விசாரணை செய்ய முடியவில்லை. போதை தெளிந்தவுடன் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என அடையாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
பணிமனை இளநிலை பொறியாளர் கிளமெண்ட் இது தொடர்பாக குணசேகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையிலும் புகார் செய்யப்படும் என மாநகர போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?