சோதனைகளுக்கு பயந்து I.N.D.I.A கூட்டணியிலிருந்து ஓடுகிறார்கள்-மாணிக்கம் தாகூர் எம்.பி
விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன் - ஒவ்வொருவரும் அரசியலில் ஈடுபட வேண்டும் என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை, CBI சோதனைகளுக்குப் பயந்தவர்கள்தான் I.N.D.I.A கூட்டணியிலிருந்து ஓடும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், “அமலாக்கத்துறை, CBI சோதனைகளுக்குப் பயந்தவர்கள்தான் I.N.D.I.A கூட்டணியிலிருந்து ஓடும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அதில் தைரியமாக நிற்கக்கூடிய ஜே.எம்.எம் ஹேமந்த் சோரன் போன்ற தலைவர்கள் தற்போதும் கூட்டணியில் உள்ளதால் I.N.D.I.A கூட்டணி பலமாக உள்ளது. அமலாக்கத்துறை, CBI, வருமான வரித்துறையைப் பயன்படுத்தி மட்டுமே பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கிறது என்றார்.
மேலும் பேசிய அவர், “ராமர் கோயில் என்பது பாஜகவின் கடைசி நம்பிக்கை. ஆனால் அமலாக்கத்துறை, CBI-யை மட்டுமே பாஜக முழுமையாக நம்பியுள்ளது. இந்த இரு துறைகளை விட்டால் பாஜகவுக்கு வேறு வழியில்லை. பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மிரட்டும் (பிளாக்மெயில்) அரசியலை மட்டுமே நம்பியுள்ளனர். அதனாலேயே I.N.D.I.A கூட்டணியை உடைக்க முடிகிறது. மக்களைப் பொறுத்தவரை வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியன மிகப்பெரிய பிரச்சனைகளாக உள்ளதால் இந்த பிரச்சனையை முன்வைத்து மக்கள் வாக்களிக்க உள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தல் மிகத்தெளிவான தேர்தலாக இருக்கும். இதில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதில் எந்தவித சந்தமும் இல்லை. அதேபோல் ராமர் கோயிலை மட்டுமே முன்வைத்து, கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளதால் பாஜக கூட்டணி அதிக இடம் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வு போன்ற காரணங்களால் தற்போது கருத்துக் கணிப்பில் வந்துள்ள தகவல் பொய்யாகிவிடும். ஏழை எளிய மக்கள், பட்டியலின, சிறுபான்மையினர் வாக்குகளே I.N.D.I.A கூட்டணிக்கே கிடைக்கும்.
ஏழை, எளிய நடுத்தர மக்களின் சிலிண்டர் விலையைக் குறைக்காமலோ, கலைஞர் உரிமத்தொகை போன்ற திட்டங்களைக் கொண்டு வராமல் மத்திய அரசு 5 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம் எந்தவித பலனையும் அளிக்காது.மக்களைப் பொறுத்தவரை இதைவிடப் பெரிய பிரச்சனையாக வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வாக உள்ளதால் அதை முன்வைத்து பிரசாரம் செய்ய உள்ளோம்.விருதுநகர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தால், கட்சித் தலைமை யாருக்கு சீட் கொடுத்தாலும் அவர்களுக்கு பணி செய்ய வேண்டியது எனது கடமை.“ எனவும் அவர் தெரிவித்தார்.
உட்கட்சி பிரச்னை குறித்து கட்சிக்குள் மட்டுமே பேச வேண்டும். மனஸ்தாபங்கள் இருக்கலாம். அதைப் பற்றி உட்கார்ந்து பேச வேண்டிய காலகட்டம் வந்துள்ளது. அதேபோன்று விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன். ஒவ்வொருவரும் அரசியலில் ஈடுபட வேண்டும். அரசியலை பற்றி பேச வேண்டும். அரசியல் அறிவு பெற வேண்டும் என்பது முக்கியம். அதன் ஒரு பகுதியாக விஜய் கட்சிப் பெயரையும், கொள்கையையும் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.அவர் தேர்தலில் போட்டியிட்டு பிரச்னை குறித்து கருத்து கூறினால், அவரது கருத்துக்கு மறுகருத்து கூறலாம். கட்சி ஆரம்பித்தவுடன் கருத்து கூறுவது நியாயமானதாக இருக்காது” என்றார்.
What's Your Reaction?