”தமிழிசையின் கருத்து என்னை காயப்படுத்தாதா?” - திருமாவளவன் கேள்வி
மது ஒழிப்பு மாநாட்டுக்கு பிறகு தமிழிசை – திருமாவளவன் இடையே மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில், தமிழிசையின் கருத்து தன்னை காயப்படுத்தாதா என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அனைத்து இஸ்லாமியர்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவிற்கு எதிரான கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ”தமிழிசை மீது மிகுந்த மதிப்பும் அவரோடு நல்ல நட்பும் உண்டு. ஆளுநருக்கு பிறகு மாலை அணிவிக்கலாம் என்று காவல்துறையினர் சொன்னார்கள். இதனால் தான் நான் மாநாட்டிற்காக கிளம்பிவிட்டேன். இதை தமிழிசை ஊடகங்களில் விமர்சித்திருந்தார். மாலை அணிவிக்கத்தான் காந்தி மண்டபம் சென்றேன். குற்ற உணர்வில் தான் நான் திரும்பி சென்றுவிட்டேன் என்று கூறுவது எப்படி சரியாகும்? இருப்பினும் உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தான் பேசிய கருத்து அவரை காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” என தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய அவர், “தமிழிசையின் விமர்சனத்தால் என் மனம் புண்படாதா?” என்று கேள்வி எழுப்பினார் திருமாவளவன்.
மேலும், முதலமைச்சர் சந்தித்த ஒரு வார காலத்திற்குள் மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதில் அரசியல் உள்ளதா என்கின்ற கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், கேட்க வேண்டியது மாநில அரசின் உரிமை.. மத்திய அரசு அதன் கடமையை செய்துள்ளதாக தெரிவித்தார் இதில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை என்றும் பதிலளித்தார்
தலித் மக்கள் மீதான ஆளுநர் ரவியின் கரிசனத்திற்கு நன்றி. பாஜக ஆளும் பிற மாநிலங்களில் தலித்துகளின் நிலை என்ன என்பதையும் அவர் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் தலித்துகளின் நிலை குறித்து ஆளுநர் சொன்னது உண்மை என்றால் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேங்கை வயல் கழிவுநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் அரசின் நடவடிக்கைக்காக பொறுத்திருப்போம்.
விரைவில் 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூட இருப்பதாக செய்திகள் வருவது விடுதலை சிறுத்தைகள் மாநாட்டிற்கு கிடைத்த வெற்றியா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகட்டும் என தெரிவித்தார்
What's Your Reaction?