புதுச்சேரி: தகரப் பெட்டியில் கட்டுக்கட்டாக ரூ.3.47 கோடி ரொக்கம்... SBI பணத்தையே பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை...

ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட 3.47 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

Mar 23, 2024 - 16:38
புதுச்சேரி: தகரப் பெட்டியில் கட்டுக்கட்டாக ரூ.3.47 கோடி ரொக்கம்... SBI பணத்தையே பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை...

புதுச்சேரி அருகே ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்ப எடுத்து செல்லப்பட்ட ரூ.3.47 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மது மற்றும் பணம் கடத்தப்படுவதை தடுப்பதற்காக புதுச்சேரி எல்லை பகுதிகளில் காவல்துறையினர் உதவியுடன் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி, திண்டிவனம் சாலை ஜிப்மர் எல்லைப் பகுதியில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தையா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர், காவல்துறையினரும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப சென்ற தனியார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கோடிக் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் ரூ.3.47 கோடி ரொக்கம் இருந்துள்ளது. 

அவர்கள் வைத்திருந்த ஆவணத்தில் ஜனவரி 21-ம் தேதி பணம் எடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இன்று வரை அந்தப் பணத்தை ஏடிஎமில் நிரப்பாமல் வாகனத்தில் வைத்து சுற்றுவது ஏன் என்று சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வாகனம் மற்றும் இரண்டு நபர்களையும் புதுச்சேரி அரசு கணக்கு மற்றும் கருவுல அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

அதில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது, ரூ.3.47 கோடி இருப்பது தெரிய வந்தது. மேலும் 98 லட்ச ரூபாயை ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பியதாகவும், ரூ.1 கோடி வங்கி அலுவலகத்தில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வருமானவரித்துறை அதிகாரிகள் வங்கிக்கு உரிய சம்மன் அனுப்பி, பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்துடன் விசாரணை நடத்தி ஆவணங்கள் இருந்தால் முறையான விசாரணைக்கு பிறகு ஒப்படைக்கப்படும்” என்றார் தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தய்யா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow