சனி பிரதோஷத்தை ஒட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.. அதிகாலை முதலே மலையேறி சாமி தரிசனம்

பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், சனிப் பிரதோஷத்தை ஒட்டி சுவாமி தரிசனம் செய்ய, ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Apr 6, 2024 - 09:44
சனி பிரதோஷத்தை ஒட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.. அதிகாலை முதலே மலையேறி சாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலாகும். 

இந்த சதுரகிரி கோயில், அகத்தியர், போகர், காலங்கிநாதர், புலிப்பாணி, கோரக்கர், கொங்கணவர் என 18 சித்தர்களும் தவம் செய்த ஸ்தலம் என கூறப்படுகிறது.  நான்கு மலைகளுக்கு நடுவே, சஞ்சீவுகிரியில் சுந்தரமகாலிங்கேஸ்வரராக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். 

ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சனிப் பிரதோஷம் மற்றும் பங்குனி மாத அமாவாசையை ஒட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இன்று (ஏப்ரல் 6) முதல் வரும் 9 தேதி வரை நான்கு நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இன்று சனி பிரதோஷம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள், அதிகாலை முதலே மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலையேற வரும் பக்தர்களிடம் இருந்து, தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow