அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபை நாகரீகம் தேவை..கடும் நடவடிக்கை பாயும்.. எச்சரித்த அப்பாவு
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று சபாநாயகர் அப்பாவு எச்சரித்துள்ளார்.
சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் சட்டசபையில் இன்றும் அனலை கிளப்பியது. அதிமுக எம்எல்ஏக்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, சபாநாயகர் அப்பாவு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இனிமேல் பேரவையில் நாகரிகமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் எதிர்க்கட்சியினர் பேசியது அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் கடந்த 19ஆம் தேதி விஷ சாராயம் குடித்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சட்டசபையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்து அதிமுகவினர் அனலை கிளப்பி வருகின்றனர். நேற்றைய தினம் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடைபெற்றது. எதிர்கட்சி எம்எல்ஏக்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டசபை இன்று 3வது நாளாக இன்று கூடியது. அப்போது கருப்பு சட்டையுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் இரண்டாவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தை தள்ளிவைத்து விட்டு கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது சபாநாயகர் அப்பாவு, அனைவரும் அமைதியாக அமர வேண்டும் என்று கூறினார். நான் பேசிய பிறகு உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். சட்டமன்ற விதிகளின்படி முதலில் கேள்வி நேரம்தான் எடுத்துக் கொள்ளப்படும். எதிர்க்கட்சி தலைவருக்கு தேவையான நேரத்தை நான் அளிப்பேன். நினைத்த நேரத்தில் நினைத்ததை பற்றி பேசும் இடம் இது இல்லை. கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க முடியாது என்று கூறினார்.
கேள்வி நேரம் மக்களுக்கானது. முக்கியமான பிரச்சனைகள் என்றால் நேரம் இல்லா நேரத்தில் பேசலாம். அதிமுக உறுப்பினர்கள் பேசுவது எதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது. அனைவரும் இருக்கையில் அமருங்கள். வினாக்கள் விடைகள் நேரத்தை ஒட்டி வைக்க வேண்டும் என்றால் விதிகளை செலுத்த வேண்டும். உங்களுக்கு ஏதோ நெருக்கடி உள்ளது அந்த நெருக்கடியை சட்டசபையில் காட்டக் கூடாது என்று கூறினார்.
சட்டசபை என்பது மக்களுக்கு பணியாற்ற கூடியது. முதலமைச்சராக நான்கு ஆண்டுகாலம் இருந்தவர் சபை நடவடிக்கையில் எந்த நேரத்தில் எவற்றை வேண்டுமென்றால் பேசலாம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இனிமேல் பேரவையில் நாகரிகமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் எதிர்க்கட்சியினர் பேசியது அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று கூறினார்.பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியிடுவதற்கு அனுமதி இல்லை என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
What's Your Reaction?